செங்கம் அருகே சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; உடல்களுக்கு துணை சபாநாயகர் நேரில் அஞ்சலி
காரில் பயணித்த சதீஷ்குமாரின் மனைவி காவியா படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனுர் எனும் இடத்தில் புறவழிச் சாலையில் பெங்களூர் நோக்கி திருவண்ணாமலையில் இருந்து சொகுசு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது காரின் முன்பு சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்படும்போது எதிரில் ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வந்து கொண்டு இருந்த லாரி மீது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த பொதுமக்கள் இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கு இருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் (சதீஷ்குமார், சர்வேஸ், சித்தார்த், சென்னப்பா, மலர், மணிகண்டன், ஹேமந்த்குமார்) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினரும் காரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ள பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் 7 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காரில் பயணித்த சதீஷ்குமாரின் மனைவி காவியா படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதில் உயிரிழந்த இரண்டு குழந்தைகள் உள்பட ஏழு பேரின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை நடைப்பெற்றது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அனைவரின் உடலுக்கும் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து எம்பி சி.என். அண்ணாதுரை எம்எல்ஏ மு.பே.கிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இறந்த 7 பேரில், சதீஷ்குமார் மற்றும் அவரது குழந்தைகள் சர்வேஷ், சித்தார்த் ஆகியோரின் 3 உடல்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே மகாராஜா கடை பகுதிக்கும், மீதமுள்ள சென்னப்பா, மலர், மணிகண்டன், ஹேமந்த் குமார் ஆகிய 4 பேரின் உடல்கள் ஊத்தங்கரைக்குஅரசு அமரர் ஊர்திகள் மூலம், காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது. மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும் கடுகாயமடைந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.