IPCC Report: உயரும் வெப்பநிலை; நெருங்கும் முடிவு? காலநிலையில் கவனம் செலுத்த ஐபிசிசி வலியுறுத்தல்
2030ஆம் ஆண்டுக்குள் புவியின் சராசரி இயல்பு வெப்பநிலை 1.5°C அளவுக்கு உயர்வதைத் தடுக்க முடியாது என்று ஐபிசிசி எனப்படும் காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழு அபாய எச்சரிக்கையை வழங்கியுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் புவியின் சராசரி இயல்பு வெப்பநிலை 1.5°C அளவுக்கு உயர்வதைத் தடுக்க முடியாது என்று ஐபிசிசி எனப்படும் காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழு அபாய எச்சரிக்கையை வழங்கியுள்ளது.
இதுகுறித்து சூழலியல் சார்ந்து இயங்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
’’புவி வெப்பமடைதலைத் தடுக்க இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் தற்போதைய திட்டங்களால் 2030ஆம் ஆண்டுக்குள் புவியின் சராசரி இயல்பு வெப்பநிலை 1.5°C அளவுக்கு உயர்வதைத் தடுக்க முடியாது என்கிற அபாய எச்சரிக்கையை வழங்கியுள்ளது காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழு ( Intergovernmental Panel on Climate Change (IPCC)).
ஐ.பி.சி.சி. தனது ஆறாவது மதிப்பீட்டுக் காலத்தின் இறுதியை எட்டியுள்ளது. இம்மதிப்பீட்டுக் காலமானது 2015ஆம் ஆண்டு தொடங்கியது. இக்காலத்தில் புவி வெப்பமாதல் தொடர்பாக மொத்தம் ஆறு அறிக்கைகளை ஐ.பி.சி.சி. வெளியிட்டிருந்தது. இந்த ஆறு அறிக்கைகளிலும் கூறப்பட்டுள்ள முக்கியமான அம்சங்களை 93 அறிவியலாளர்கள் தொகுத்து இம்மதிப்பீட்டு காலத்தின் இறுதி அறிக்கையாக இந்த தொகுப்பு அறிக்கையை(Synthesis Report) வெளியிட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ஐ.பி.சி.சி.யின் முதல் பணிக்குழு அறிக்கை, 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு வளிமண்டலத்தில் நிறைந்துள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவுக்கு சந்தேகத்திற்கிடமின்றி மனித நடவடிக்கைகள் மட்டுமே காரணம் எனத் தெரிவித்திருந்தது. மேலும், பாரிஸ் ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தங்களது பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தினாலும் கூட இந்த நூற்றாண்டின் இறுதியில் புவியின் சராசரி வெப்பநிலையானது 3° செல்சியசை தொட்டுவிடும் என எச்சரித்திருந்தது.
சுவிட்சர்லாந்தில் வெளியிடப்பட்ட ” AR6 Synthesis Report: Climate Change 2023” என்றழைக்கப்படும் தொகுப்பு அறிக்கை நம் புவியில் உயிரினங்கள் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் சவாலான ஒரு நிலையை எட்டிவிட்டதை உணர்த்துகிறது. குறிப்பாக கடந்த நூறாண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருக்ககூடிய புதைபடிம எரிபொருள் பயன்பாடு, அதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு, தவறான நிலப்பயன்பாடு ஆகியவற்றால் புவியின் சராசரி இயல்பு வெப்பநிலை 1.1°C அளவுக்கு உயர்ந்து விட்டதை ஐ.பி.சி.சி. உறுதிபடுத்தியுள்ளது. இந்த வெப்பநிலை உயர்வால் வெள்ளம், கனமழை, வறட்சி, புயல், காட்டுத்தீ போன்ற மிகத் தீவிரமான வானிலை நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையில் ஏற்பட்டு இயற்கையையும் உலகின் அனைத்துப் பகுதிகளில் வாழும் மக்களையும் பாதித்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பாதிப்பு
புவியின் வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க அதன் தாக்கமும் பாதிப்பும் அதிவேகமாக அதிகரிப்பதாகவும் பெருந்தொற்று, போர்ச்சூழல் போன்ற காரணிகளால் இத்தாக்கம் மேலும் அதிகரித்து கையாள முடியாத நிலையை ஏற்படுத்துவதாகவும் ஐ.பி.சி.சி. தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கை புவி வெப்பமாதலால் அதிகம் பாதிப்படைந்த மற்றும் எதிர்காலத்தில் பாதிப்படையக்கூடிய நிலையில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அந்நாடுகளின் சூழல் அமைவுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதம் குறித்தும் தனிக்கவனம் செலுத்துகிறது. சரியான தணிப்பு மற்றும் மட்டுப்படுத்தல் செயல்பாடுகளை உடனடியாக மேற்கொள்வதன் மூலமே வளங்குன்றா மற்றும் சமத்துவமான புவியை உருவாக்க முடியும் என இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
மேலும், புவி வெப்பமடைதலைத் தடுக்க இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் தற்போதைய திட்டங்களால் 2030ம் ஆண்டுக்குள் சராசரி இயல்பு வெப்பநிலை 1.5°C அளவுக்கு உயர்வதைத் தடுக்க முடியாது என்றும் தற்போதைய உமிழ்வை உடனடியாக அனைத்துத் துறைகளிலும் பாதியாகக் குறைத்தால் மட்டுமே 2030க்குள் வெப்பநிலை 1.5° C அளவுக்கு உயராமல் தடுக்க முடியும் எனவும் இந்நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் எனவும் ஐ.பி.சி.சி. தெரிவித்துள்ளது.
என்னதான் தீர்வு?
இருப்பினும், இந்த மீளமுடியாத பாதிப்பின் வேகத்தையும் தாக்கத்தையும் சில நடவடிக்கைகளால் தடுக்க முடியும் எனவும் சிறு நம்பிக்கையை ஐ.பி.சி.சி. அளித்துள்ளது. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க சாத்தியங்கள் நிறைந்த, திறன் வாய்ந்த பல்வேறு வழிகள் இருப்பதாக ஐ.பி.சி.சி. தெரிவித்துள்ளது. பல்வேறு பசுமை முயற்சிகள் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் இதன்மூலம் சேமிக்கப்படும் பணமே உமிழ்வைக் குறைப்பதற்கு ஆகும் செலவைவிட அதிகமாக இருக்கும் என ஐ.பி.சி.சி. தெரிவித்துள்ளது. இந்த பசுமை சார் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது உள்ளூர் மக்களின் அறிவைப் பயன்படுத்தி அவர்களின் ஒப்புதலோடு திட்டங்களை வகுக்க வேண்டும் என ஐ.பி.சி.சி. வலியுறுத்தியுள்ளது.
பாதிப்புகளைத் தணிப்பதற்கும், மட்டுப்படுத்துவதற்கும், தவிர்ப்பதற்குமான பல்வேறு வழிகள் சோதனை செய்யப்பட்டு அவை வெற்றியும் அடைந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள ஐ.பி.சி.சி. அரசு நிர்வாகங்கள் அவற்றை அமல்படுத்துவதற்கு நிதி ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. புவியின் நிலம், கடல், நன்னீர் ஆகியவற்றில் 30-50% பகுதிகளை பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்தால் மட்டுமே புவியை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்று கூறியுள்ள ஐ.பி.சி.சி. உணவு, மின்னுற்பத்தி, போக்குவரத்து, கட்டுமானம், நிலப் பயன்பாடு ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் உமிழ்வைக் குறைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
இந்த தொகுப்பு அறிக்கையின் கூறப்பட்டுள்ள முக்கியமான கருத்துகள் பின்வருமாறு;-
• வளிமண்டலம், தாழ்வெப்ப மண்டலம்/பனிமண்டலம், உயிர்மண்டலம் ஆகியவற்றில் புவிவெப்பமாதலால் பரவலான, வேகமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
• மனிதர்களால் உந்தப்பட்ட காலநிலை மாற்றம் ஏற்கெனவே நம் புவியின் எல்லா பகுதிகளிலும் நிலவும் வானிலையைப் பாதித்துவிட்டது.
• காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் புவி வெப்பமடைதலுக்கு மிகவும் குறைவான பங்களிப்பையே வழங்கிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.
• புவி வெப்பமாதலைத் தடுக்கும் பணிகளுக்கான நிதி ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.
• உமிழ்வைக் குறைப்பதற்கான உலக நாடுகள் சமர்ப்பித்த திட்டங்களால் புவியின் சராசரி வெப்பநிலை 1.5° C அளவுக்கு உயருவதைத் தடுக்க முடியாது.
காலநிலை மாற்றம் இப்புவியில் வாழும் எல்லா உயிரினங்கள், சூழல் அமைவுகளின் இருப்புக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளதை ஐ.பி.சி.சி.யின் தொகுப்பு அறிக்கை நமக்கு உணர்த்துகிறது. மீளமுடியாத பாதிப்பிலிருந்து புவியைக் காப்பதற்காக நமக்கிருக்கும் வாய்ப்புகள் மிகக் குறுகலாகி வருகிறது. அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்கிற நிலையில் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து முயற்சிகளுக்கும் எதிர் பாதையில் இந்திய அரசு பயணித்து வருவதுதான் மிகவும் வேதனையளிக்கக் கூடிய விஷயமாகும்.
இந்திய அரசின் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்கள் எதுவுமே பெருமளவில் நமக்குப் பலனளிக்கக் கூடியவையாக இல்லை. தொடர்ந்து புதைப்படிம ஆற்றல் பயன்பாட்டை விரிவுபடுத்துவதை இந்திய அரசு நிறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசும் இனிமேல் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் அனைத்தையும் காலநிலை மாற்ற கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்து வருகிறது. ஐ.பி.சி.சி. நமக்கு அளித்திருக்கும் வாய்ப்புகளில் முக்கியமானது நிலப்பயன்பாடு மாற்றம் என்பதாகும். 30-50% வரைக்குமான நன்னீர், கடல், நிலப் பகுதிகளைப் பாதுகாக்குமாறு ஐ.பி.சி.சி. வலியுறுத்தியுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டுக்கென காலநிலை மாற்றக் கண்ணோட்டத்தில் நிலப் பயன்பாட்டுக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கையை விரிவாகப் பார்க்க: https://www.ipcc.ch/report/sixth-assessment-report-cycle/