Special Bus: தொடர் விடுமுறை! இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் - இத்தனை பேருந்துகளா?
சுதந்திர தினம் உள்பட நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இன்று முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

நாட்டின் 78வது சுதந்திர தினம் கோலாகலமாக நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினமான நாளை வியாழக்கிழமை என்பதாலும், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
வேலை செய்பவர்கள், மாணவர்கள் என பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
சென்னையில் இருந்து எத்தனை பேருந்துகள்?
கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மொத்தம் 470 பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளது. அதேபோல, நாளை மறுநாளான 16ம் தேதி மற்றும் 17ம் தேதியும் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு 365 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் மட்டுமின்றி கோயம்பேட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூர், நாகை, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று 70 பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை மறுநாள் மற்றும் 17ம் தேதி 65 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மற்ற ஊர்களில் எப்படி?
சென்னை மட்டுமின்றி பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழக அரசு போக்குவரத்து துறை வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து 200 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
மேலும், ஆந்திராவிற்கு பேருந்துகள் இயக்கப்படும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று, வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
படையெடுக்கும் மக்கள்:
தொடர்ந்து நான்கு விடுமுறை என்பதால் இன்று காலை முதலே பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்று மாலை அதிகளவில் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பயணிகள் கிளாம்பாக்கம் செல்ல ஏதுவாக அதிகளவு பேருந்துகள் பல பகுதிகளில் இருந்து இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க உள்ள நிலையில், தனியார் பேருந்துகள் தங்களது கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்துகள் மட்டுமின்றி ரயில்களிலும் இன்று அதிகளவு பயணிகள் பயணிக்க உள்ளனர். ரயில்களில் வெளியூர் பயணிக்க ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
பேருந்துகளில் பயணிக்கவும் ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். தொடர் விடுமுறை என்பதால் விமானங்களும் தங்களது கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளனர். இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

