V.O Chidambaram: சிம்ம சொப்பனமாக விளங்கிய கப்பலோட்டிய தமிழன்: ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த வ.உ.சி பிறந்தநாள் இன்று!
தற்சார்பு பொருளாதாரத்தின் வடிவமாக சுதேசி கப்பல் உருவானது எப்படி? சுதேசி கப்பல் நிறுவனங்களை ஒடுக்க ஆங்கிலேயர்கள் செய்த சதி செயல் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
“வெள்ளையனே வெளியேறு! என்ற முழக்கத்தால் ஆங்கிலேயர்களை நடுநடுங்க வைத்தவர் வ.உ. சிதம்பரனார். சாதியாலும் மதங்களாளும் பிரிந்து கிடந்த மக்களை கூட விடுதலை என்ற ஒன்றை உணர்வால் இணைத்தவர் வ.உ.சி. இவரின் மேடை பேச்சு அனைத்து குடிமகன்களுக்கும் விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வை விதைத்தது.
அந்த காலக்கட்டத்தில் கப்பல் என்பது வர்த்தகத்தின் அச்சாணியாக இருந்தது. ஆங்கிலேய ஆதிக்கவாதிகளின் பெரும் வணிகம் இந்த கப்பல் என்பதை அறிந்து, சொந்த கப்பல் நிறுவனம் ஒன்றை தொடங்க முயற்சி செய்தார். தற்சார்பு பொருளாதாரத்தின் வடிவமாக சுதேசி கப்பல் உருவானது எப்படி? சுதேசி கப்பல் நிறுவனங்களை ஒடுக்க ஆங்கிலேயர்கள் செய்த சதி செயல் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
வணிகத்தின் அச்சாணியாக இருந்த கப்பல் கம்பெனிகள்:
ஆங்கிலேயர்கள் காலத்தில், தமிழ்நாட்டின் தூத்துக்குடியிலிருந்து இலங்கையில் உள்ள கொழும்புவிற்கு தினமும் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியின் கப்பல்கள் சென்று கொண்டிருந்தது. கப்பல் வணிகத்தில் ஆங்கிலேயர்களே ஆதிக்கம் செலுத்தினாலும், சில இந்தியர்களும் அங்கும் இங்குமாய் கப்பல் நிறுவனங்களை நடத்தி வந்தனர்.
கொல்கத்தாவில் உள்நாட்டு நதிப் போக்குவரத்து நாவாய் சங்கத்தை ஜானகி நாத் என்பவர், கடந்த 1884ஆம் ஆண்டு தொடங்கினார். அவருக்கு சொந்தமாக சரோஜினி, பாக்யலட்சுமி, ஸ்வதேசி, பாரத், லார்டரிப்பன் ஆகிய ஐந்து கப்பல்கள் இயங்கின.
ஜானகி நாத்தின் அடுத்தடுத்த முயற்சிகளை தடுக்க ஆங்கிலேய கப்பல் நிறுவனம், பல்வேறு சதிகளை செய்தது. அரசின் ஆதரவு அதற்கு இருந்ததால், சுதேசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்க மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதை அடுத்து, கடந்த 1897ஆம் ஆண்டு, கிழக்கு வங்க நதிப் போக்குவரத்து கப்பல் கம்பெனி தொடங்கப்பட்டது.
கடந்த 1906ஆம் ஆண்டு முதல் 1908ஆம் ஆண்டு வரையில், சுதேசி கப்பம் கம்பெனிக்கான பணிகள் வீறுபெற்று நடந்தாலும், ஆங்கிலேய கப்பல் நிறுவனத்தின் சதியினால் அது மீண்டும் வீழ்த்தப்பட்டது. இந்திய தொழிலதிபரான தனுஷ்கோடி ராசு, பொதுமக்கள் நலனுக்காக 1890ஆம் ஆண்டு ஆங்கிலேயே கப்பலுக்கு எதிராக தமிழ்நாட்டில் கப்பல்களை இயக்கினார்.
ஆங்கிலேய கடல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஆதங்குடி குடும்பத்தினர் தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவிற்கும் இடையில் ந.மு கம்பெனி என்ற பெயரில் சரக்கு கப்பல் நிறுவனத்தை நடத்தினர்.
அதேபோல, ஆங்கிலேயே கப்பல் நிறுவனத்திற்கு சவால் விடும் வகையில் நாகப்பட்டினத்திற்கும் காக்கிநாடாவிற்கும் இடையில் சி.வ கப்பல் கம்பெனி என்ற பெயரில் சி.வ.நல்லபெருமாள் கப்பல்களை இயக்கினார். இதற்கு எதிராத சதி வேலையில் ஈடுபட்ட ஆங்கிலேயர்கள், சுதேசி கப்பல் கம்பெனியின் படகுகள் மீது தொடர்ச்சியாக தங்கள் கம்பெனியின் படகுகளை மோதவிட்டு நஷ்டம் ஏற்படுத்தினர். இன்னும் பல தொல்லைகளை செய்து அந்த கம்பெனியை மூட வைத்தனர்.
ஆங்கிலேய சதியை முறியடிக்க கிளம்பிய வ.உ.சி.
ஆங்கிலேயர்களின் இந்த சதி செயல்கள், நாட்டு மக்களிடம் அவர்கள் மீதான வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. தங்களுக்கென்று ஒரு தனி கப்பல் நிறுவனம் வேண்டும் என்று தமிழ் வியாபாரிகள் நினைக்கத் தொடங்கினர். இதனால், கப்பல் நிறுவனம் மட்டுமல்ல பின்னாளில் சுதேசி நூல் ஆலைகள் உருவாக்கும் எண்ணமும் வ.உ.சியிடம் உருவானது.
கடந்த 1906ஆம் ஆண்டு, சுதேசி கப்பல் நிறுவனத்திற்கான முதல் விதையை விதைத்தார் வ.உ.சி. வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளான அக்டோபர் 16ஆம் தேதி, சுதேசி கப்பலை பதிவு செய்தார் வ.உ.சி. பத்து லட்சம் ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்ட அவர், சென்னையில் அலுவலகம் எடுத்து கப்பல் நிறுவனத்தை இயங்கினார்.
பாலவநத்தம் ஜமீன்தார், பாண்டித்துரை தேவர், கே.வி.ராகவாச்சாரி, கந்தசாமி கவிராயர் ஆகியோர் வ.உ.சிக்கு உதவி செய்தனர்.
பம்பாயின் பெரும் வணிகர் கே.ஜெ.முகம்மது பக்கீர் சேட்டும் பெரும் உதவி செய்தார். சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்குவதில் இஸ்லாமியர்கள் பெரும் பங்காற்றினர்.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கப்பலோட்டிய தமிழன்:
பாண்டித்துரை தேவரை தலைவராகக் கொண்டு கப்பல் நிறுவனம் இயங்கத் தொடங்கியது. ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பை முதல் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் கப்பல் நிறுவனமான இது, வ.உ.சியின் அரும்பெரும் முயற்சியில் உருவானது. தொடக்கத்தில் இந்த கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமாக கப்பல் எதுவும் இல்லை.
’ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி’ என்ற நிறுவனத்திடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடக்கத்திலேயே ஒடுக்க நினைத்தனர் ஆங்கிலேயர்கள். அதன்படி, ’ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி’யை வாடகைக்கு கப்பல் தரவிடாமல் தடுத்தனர். அந்த நிறுவனம் கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.
உடனடியாக வ.உ.சி இலங்கையில் உள்ள கொழும்பு சென்று வேறு ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து வந்தார். இருப்பினும், சொந்தமாக கப்பல் வேண்டும் என்ற வ.உ.சியின் கனவு அவரை தூங்க விடாமல் செய்தது. இதனால், அவர் வட இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டார் தொடர் முயற்சிகளின் விளைவாக, ’எஸ்.எஸ். காலியோ’ என்ற கப்பலுடன் தமிழ்நாடு திரும்பினார் வ.உ.சி. சுதேசி கப்பல் நிறுவனம் மெதுமெதுவாக வளர்ந்தது. விடுதலை வேட்கையால் கப்பல் நிறுவனத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.