ஒரு பக்கம் ஸ்பீட் கண்ட்ரோல்.. மறு பக்கம் டாஸ்மாக் கடைகள் மூடல்.. வருவாயை ஈடுகட்ட வழி தேடுகிறதா அரசு?
தமிழ்நாட்டில் மதுபான கடைகள் மூடப்படும் என்பது பொதுமக்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், வாகன ஓட்டிகளுக்கு வேக கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மக்கள் இடையே பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படும் இரண்டு விஷயங்கள், இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது, அதே சமயம் வாகன ஓட்டிகளுக்கு வேக கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டுமே மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகளுக்கு வேக கட்டுப்பாடு:
சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு எந்தவொரு விபத்தும், ஏற்படாமல் இருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் போக்குவரத்து விதிமுறைகள் கட்டமைக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 10 இடங்களில் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாகவும், வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ. வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கி.மீ. வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
500 மதுபான கடைகள் மூடல்:
அதேபோல, தமிழ்நாடு அரசு அறிவித்தபடி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் தகுதியாக 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த கடைகள் கண்டறியும் பணி நடைபெற்று வந்தது. பின்னர் ஏப்ரல் 20 ஆம் தேதி மதுக்கடைகள் மூடுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. இதனிடையே தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘மாநிலம் முழுவதும் செயல்படும் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இன்று முதல் செயல்படாது’ என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று (ஜூன் 22) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது. அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டும் மக்களிடையே பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. 500 மதுபானக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதே சமயம் வாகன ஓட்டிகளுக்கு வேகக் கட்டுப்பாடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டது, பெரும்பாளானவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
40 கிமீ வேகம் என்பது எப்படி சாத்தியமாகும்? கியர் வண்டி வைத்திருப்பவர்கள் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள். இன்றைய சூழலில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பி.எஸ் 6 வகை என்ஜின்களுடன் 300 முதல் 550 சிசி வரை வாகனங்கள் தயாரிக்கப்பட்டு, சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் அனைத்துமே அதிகபட்சமாக 120 – 140 கிமீ வேகத்திற்கு இயக்கும் திறன் கொண்டது. இப்படி இருக்கும் நிலையில் 40 கிமீ வேகம் என்பது மிகவும் குறைவு, இந்த வேகத்தில் இயக்கினால் வாகனங்கள் பழுதாகவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள். இந்த விதிமுறை அமலுக்கு வந்தால் கடும் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே போக்குவரத்து துறை சார்பாக வாகன ஓட்டிகளிடம் கடுமையாக அபராதம் வசூளிக்கப்பட்டு வருகிறது. சிக்னலில் நிற்காமல் செல்லும் நபர்கள், ஹெல்மெட் அணியாமல் இருப்பவர்கள், பின் இருக்கையில் இருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருப்பது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, ஓவர் ஸ்பீட் என ஏரளமான காரணங்களுக்காக அபராதம் வசூளிக்கப்படுகிறது. இதனால் மக்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கும் தீரா வாக்குவாதங்கள் இருந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு அரசுக்கு வருவாய் அதிகம் ஈட்டித்தரும் மதுபான துறையில் 500 கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கும் விதமாக இருந்தாலும் அரசு வருவாயை எப்படி ஈடு செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் 40 கிமீ –க்கு அதிகமான வேகத்தில் வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுபான கடைகளில் கிடைக்கும் வருவாயை ஈடு செய்யும் விதமாக வாகன ஓட்டுகளிடமிருந்து அபராதம் வசூலிக்க அரசு திட்டமிடுகிறதா என்ற கோணத்திலும் மக்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர். இப்படி இருக்கும் நிலையில், புதிய விதிமுறைகள் குறித்து ஆயுவு செய்வதற்காகவே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு தற்போது அபராதம் விதிக்கப்படாது என்றும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.