Child Wrong Treatment: அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைக்கு தவறான சிகிச்சை? வெட்டி அகற்றப்பட்ட அழுகிய கை..
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் அழுகிய ஒன்றரை வயது குழந்தையின் கை, அறுவை சிகிச்சை மூலம் முற்றிலுமாக அகற்றப்பட்டது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் அழுகிய ஒன்றரை வயது குழந்தையின் கை, அறுவை சிகிச்சை மூலம் முற்றிலுமாக அகற்றப்பட்டது.
யார் இந்த குழந்தை:
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை முகமது மகிர். குறை பிரசவத்தில் பிறந்ததாக கூறப்படும் இக்குழந்தைக்கு தலையில் ரத்த கசிவு மற்றும் நீர் கசிவு உள்ளிட்ட சில பாதிப்புகள் இருந்துள்ளன. இதற்கான சிகிச்சைக்காக குழந்தை முகமது மகிரை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.
தவறான சிகிச்சை?
மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தையின் வலது கை கடந்த மாதம் 26-ம் தேதி திடீரென அழுக தொடங்கியுள்ளது. குழந்தையின் கையில் ட்ரிப் போடும் போது ஏற்பட்ட கவன குறைவே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைய்ல் சிகிச்சை பெற்று வந்த முகமது மகிர், எழும்பூர் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு பரிசோதிதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், குழந்தையின் உயிரை காப்பதற்காக அழுகிய கையை அகற்ற முடிவு செய்தனர்.
அகற்றப்பட்ட குழந்தையின் கை:
அதனடிப்படைய்ல் அந்த குழந்தைக்கு இன்று மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை நடந்தது. 2 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில், குழந்தை முகமது மகிரின் வலது கை முழுவதுமாக அகற்றப்பட்டது.
குழு அமைப்பு:
இதனிடையே, குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையின் கை அழுகியதற்கு காரணம் தவறான சிகிச்சையா அல்லது மருத்துவ பணியாளர்களின் கவனக் குறைவா என்பது குறித்து ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உறுதி:
இதுதொடர்பாக பேசிய மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக புகார் எழுதுள்ளது. குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரித்தேன். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளன. கையில் ஊசி செலுத்தியது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். மருத்துவர்களாக இருக்கட்டும் அல்லது செவிலியர்களாக இருக்கட்டும். அவர்கள் யாரும் பாதிப்பு ஏற்படுத்த மருத்துவமனைக்கு வருவதில்லை. பாதுகாக்கத்தான் வருகிறார்கள். நிச்சயம் உண்மைத்தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். சிகிச்சையின்போது கவனக்குறைவு இருந்துள்ளதா எனக் கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். விரைவில் அந்த குழு சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.