அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த புது ஐடியா! ஐ.ஐ.டி.யுடன் கைகோர்த்த பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் பயிலும் 90 லட்சம் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தும் மேலாண்மை அமைப்பை சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் 90 லட்சம் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தும் மேலாண்மை அமைப்பை, சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறையினர் இணைந்து, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள டிஜிட்டல் கற்றல் தளத்தை மேம்படுத்தி, அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு உயர் தரக் கற்றல் அனுபவத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் தொழில்நுட்பங்களை சென்னை ஐஐடி அறிஞர்கள் பயன்படுத்துகின்றனர்.
இதில், மதிப்பீடு உருவாக்கம், மோசடிகளைக் கண்டறிதல் உள்ளிட்ட செயல் திறன் மதிப்பீடு, மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தை கண்காணிக்கும் டேஷ் போர்டுகள், பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு ஆகியவை அடங்கி உள்ளது.
இந்த நிலையில், சென்னை ஐஐடி, தமிழக பள்ளிக் கல்வித்துறை இணைந்து செயல்பட உள்ளது. இதன்படி, 6 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 90 லட்சம் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிதாக கட்டப்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில், கற்றல் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இதையும் வாசிக்கலாம்: SMC: பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பின்பற்ற வேண்டிய 8 அம்சங்கள்; கல்வித்துறை உத்தரவு
இந்த முயற்சியில், சென்னை ஐஐடியின் மேலாண்மை ஆய்வுகள் துறையின் இணைப் பேராசிரியரும், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ராபர்ட் போஷ் மையத்தின் (RBCDSAI) முக்கிய உறுப்பினருமான டாக்டர் நந்தன் சுதர்சனம், இணைந்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, டிஜிட்டல் தளம் என்பதால், நம்மால் உள்ளடக்கங்களைத் தேவைக்கேற்ற வகையில் மாற்றி அமைத்து, கண்காணிக்க முடியும். தரவு சார்ந்த கட்டமைப்பை உருவாக்குவதன்மூலம் கல்வியின் தரத்தை நம்மால் மேம்படுத்த முடியும்.
இந்த முன்னெடுப்பு குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் கே.நந்த குமார் கூறும்போது, "திறன் அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்றல் மாதிரியை நோக்கி தமிழ்நாடு நகர்ந்து வருகிறது. சென்னை ஐஐடி உடனான எங்களின் கூட்டு முயற்சி, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படிக்கட்டாக இருக்கும். அதேபோல தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த முன்னெடுப்பு எப்போதும் திறந்தே இருக்கும்" என்று ஆணையர் கே.நந்த குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: CM Stalin Speech: பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்தது தி.மு.க. அரசு- முதலமைச்சர் பெருமிதம்