CM Stalin: ”தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல": அமித்ஷாவின் இந்தி குறித்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!
தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என அமித்ஷாவின் இந்தி குறித்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
CM Stalin: தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என அமித்ஷாவின் இந்தி குறித்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
அமித்ஷா பேசியது என்ன?
டெல்லியில் அலுவல் மொழிக்கான பார்லிமென்ட் குழுவின் 38வது கூட்டம் நேற்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, "உலகளவில் இந்தி மற்றும் நாட்டின் அனைத்து மொழிகளையும் பிரதமர் மோடி பிரபலபடுத்தி வருகிறார். அதனால், மாநில மொழிகளுக்கு இந்தி மொழி போட்டி அல்ல. இந்தி மொழியை ஏற்றுக் கொள்வதன் வேகம் குறைவாக உள்ளது. அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதன் வாயிலாகவே நாடு அதிகாரம் பெறும். இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பு இன்றி ஏற்க வேண்டும். ஏனென்றால் இந்தி மொழி உள்ளூர் மொழிக்கான போட்டி அல்ல" என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி:
இந்நிலையில், அமித்ஷாவின் இந்தி குறித்த பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல.
I strongly denounce Union Home Minister @AmitShah's audacious push for Hindi acceptance. It's a blatant attempt to subjugate non-Hindi speakers. Tamil Nadu rejects any form of Hindi hegemony and imposition. Our language and heritage define us – we won't be enslaved by Hindi!… pic.twitter.com/gNiJ2TGtKm
— M.K.Stalin (@mkstalin) August 5, 2023
தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு மத்தியில் ஆளும் பாஜக மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், நேற்று அமித்ஷா இந்தி மொழி குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.