Magalir Urimai Thogai: ரூ.1000 உரிமைத்தொகை, சேமிப்பது எப்படி? தமிழ்நாடு அரசு கொடுத்த ஐடியாக்கள் இதுதான்.. நல்லா இருக்கே..!
Kalaignar Magalir Urimai Scheme: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் கிடைக்கும் ஆயிரம் ரூபாயை எப்படி சேமிக்கலாம் என, தமிழ்நாடு அரசு சார்பில் கையேடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
Kalaignar Magalir Urimai Scheme: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் கிடைக்கும் ஆயிரம் ரூபாயை, செல்வமகள் போன்ற திட்டங்கள் மூலம் சேமிக்கலாம் என தமிழ்நாடு அரசு சார்பில் கையேடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்:
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பதலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்து இருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஒரு கோடியே 6 லட்சம் பேர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ளவர்களாக அரசு அறிவித்தது. மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15ம் தேதி ஆன இன்று, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதோடு, அந்த நிதியை எப்படி சேமிக்கலாம் என்பது தொடர்பான கையேடு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
எதிர்காலத்திற்கான சேமிப்பு:
70 பக்கங்களை கொண்ட கையேட்டில் சேமிப்பு திட்டங்கள், பணத்தை எதற்காக சேமிக்கணும்? பணத்தை எங்கே சேமிக்கணும், பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்ற விவரங்கள் அதில் உள்ளன. அதோடு, வங்கிகள், அஞ்சலகங்களில் என்னென்ன சேமிப்பு திட்டங்கள் உள்ளன என்பது தொடர்பான பல்வேறு தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, செல்வமகள், பொன்மகன் சேமிப்பு திட்டங்களிலும், தொடர் சேமிப்பு திட்டம், நிலையான வைப்புத் திட்டங்களிலும் பயனாளர்கள் பணத்தை சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம் போன்ற அறிவுறுத்தல்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு எச்சரிக்கை:
கலைஞர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களுக்கு என பிரத்யேக ஏ.டி.எம் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான விவரங்களில், ஏ.டி.எம் கார்டின் பாஸ்வேர்ட், ஓ.டி.பி. எண்ணை யாருடனும் பகிரக்கூடாது. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும்போது அடையாளம் தெரியாத நபர்களின் உதவியை நாட வேண்டாம். தொலைபேசி அழைப்புகளில் வங்கி விவரங்களை தெரிவிக்க வேண்டாம். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் தொலைபேசி எண்கள், மாவட்ட வருவாய் அதிகாரி, ஊரக வளர்ச்சி அதிகாரி, மகளிர் திட்ட இயக்குனர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் அதில் வழங்கப்பட்டுள்ளன.
திட்டங்களின் விவரங்கள்:
அந்த கையேட்டில், “தமிழக அரசின் மகளிர் நலத்திட்டங்கள், அரசின் சுழல்நிதி வழங்கும் விவரம், மகளிருக்கான வங்கி கடன், சிறு தொழில் தொடங்கும் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்று உள்ளன. அதுமட்டுமின்றி இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளன. பெண்களுக்கான கடன் திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள், தொழில் முனைவோர் திட்டங்களும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாதவிடாய் சுகாதார திட்டம், தடுப்பூசி திட்டம், மருத்துவ சேவை திட்டம், நோய்கிருமி தொற்றில் இருந்து பாதுகாத்தல் ஆகிய விவரங்களும் அந்த கையேட்டில் உள்ளன.