7 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்குமாம்.. எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் நேற்று மட்டும் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக 6-ந் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, 7-ந் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் இன்று மேகமூட்டத்துடன் காண வாய்ப்புள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மேலும் சில நாட்களுக்கு கனமழையின் தாக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழை காரணமாக உடுமலைப்பேட்டையில் திருமூர்த்தி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று மட்டும் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டி பாளையத்தில் 11 செ.மீ. மழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 8 செ.மீ.ரும், மதுரை பேரையூர், விருதுநகரின் சிவகாசி, சேலம், கடலூரின் பெலாந்துறை ஆகிய பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகியது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து மழை பெய்யும் என்பதால், ஆபத்தான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்