Minister Periyasamy Case: மேலும் ஒரு அமைச்சருக்கு சிக்கல்.. சொத்துக் குவிப்பு வழக்கில் ஐ. பெரியசாமி விடுவிப்பு ரத்து
தமிழ்நாட்டில், அமைச்சர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமைச்சர்கள் ஒவ்வொருவராக வழக்குகளில் சிக்கலை சந்தித்துவருவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திமுக தலைமைக்கும் இதனால் தலைவலி ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு
கடந்த 2006 முதுலு 2010 வரையிலான காலத்தில், வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக ஐ. பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு உள்ளிட்டோர் மீது 2012ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சட்டப்படி தேவையான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் போதுமான அளவில் இல்லாததை குறிப்பிட்ட நீதிமன்றம், ஐ. பெரியசாமி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கில் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனா்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 பேரையும் திண்டுக்கல் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தங்கள் தரப்பில் தவறு இல்லை என்றும், திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐ. பெரியசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும், 4 பேருக்கும் எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்து, அடுத்த 6 மாதங்களில் வழக்கை முடிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
திமுக தலைமைக்கு தலைவலி
ஏற்கனவே அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரின் சொத்துக்குவிப்பு வழக்குகளை மறுவிசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது அந்த பட்டியலில் ஐ. பெரியசாமியும் இணைந்துள்ளார்.
மறுபக்கம், பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியும், வாய்க்கொழுப்பால் பொன்முடியும் அமைச்சர் பதவிகளை இழந்துள்ளனர். இதனால், திமுக தலைமைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ள நிலையில், திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக சிக்கலில் சிக்கி வருவது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.





















