Governer RN ravi meets Venkataramani: விஸ்வரூபம் எடுக்கும் செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ரவி சந்திப்பு...
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை சந்தித்தார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெறுவதற்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணியை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார்.
7 நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்தார். இந்நிலையில் அவர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை சந்தித்தார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற ஆளுநர் வழக்கறிஞரை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உடன் ஆலோசனை நடத்திய பின் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பினார். ஆனால், இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்துமாறு ஆளுநரிடம் தெரிவித்தார். இதனால், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக, முதலமைச்சருக்கு ஆளுநர் மீண்டும் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், ஆளுநர் ரவி கடந்த 7ஆம் தேதி ஒரு வார பயணமாக டெல்லிக்குச் சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசியல் சூழல், செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும், அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒரு சில ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உடனான் ஆளுநரின் சந்திப்புக்கு பின் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது குறித்து முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க