Banwarilal Purohit: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு..!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநராக பொறுப்பு வகிப்பவர் பன்வாரிலால் புரோகித். இவர், கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக வி.பி.சிங் பத்னோர் கடந்த 2016ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் குடியரசுத் தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் முன்னதாக, மக்களவை உறுப்பினராக இருமுறையும், மாநிலங்களை உறுப்பினராகவும், ராஜஸ்தான் மாநில அரசின் அமைச்சராகவும், ராஜஸ்தான் மாநிலத்தின் எம்.எல்.ஏ.வாகவும் பொறுப்பு வகித்தவர்.
நாட்டில் கடந்த சில மாதங்களில் மட்டும் பல மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி கர்நாடக மாநிலத்திற்கு தாவர்சந்த் கெலாட், ஹரியானா மாநிலத்திற்கு ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா, மிசோரம் மாநில ஆளுநராக ஹரிபாபு, மத்திய பிரதேச ஆளுநராக மங்குபா் சகன்பாய் படேல், ஹிமாச்சல பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத், கோவா மாநில ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா ஆளுநராக சத்யதேவ் நாராயணன் ஆரியா, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ் நியமிக்கப்பட்டனர்.
இந்த சூழலில், பஞ்சாப் மாநில ஆளுநராக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரச நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாண்டிச்சேரியின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற்றது முதல், அந்த மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.