(Source: ECI/ABP News/ABP Majha)
Kumaran Sethupathi : காலமானார் ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி... தமிழ்நாடு அரசு, அதிமுக இரங்கல்..
ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலின் தக்காருமான ராஜாகுமரன் சேதுபதி இன்று திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் அரண்மணையில் குடும்பத்துடன் வசித்துவந்த என்.குமரன் சேதுபதி இன்று மாரடைப்பால் காலமானாதாக தெரிகிறது. இவர் ராமேஸ்வரம் திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்கத்தலைவர் ஆகிய பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தென் தமிழகத்தில் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்கள் சேதுபதிகள், வங்கக்கரையின் அதிபதியாய் முதலில் போகளூரையும், பின் ராமநாதபுரத்தையும் தலைநகராக்கி ஆட்சி புரிந்தவர்கள். சேதுக் கரைக்கு அதிபதிகளாகத் திகழ்ந்ததால் சேதுபதிகள் என அழைக்கப்பட்டனர்.
இவரின் மறைவுக்கு ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிக்கை மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
இராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா திரு.நாகேந்திர குமரன் சேதுபதி அவர்கள் இன்று காலை மாரடைப்பால் காலமான செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திருக்கோயில், கல்விநிறுவனப் பொறுப்புகளில் சிறப்பாகச் சேவையாற்றி வந்த அவரது இந்த திடீர் இறப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து அதிமுக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி ஆகியோரின் இரங்கல் செய்தி..
இராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், இராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலருமான ராஜா திரு. N. குமரன் சேதுபதி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
திரு. குமரன் சேதுபதி அவர்கள், இராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர். இராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த பெருந்தகையாளர்.
போற்றுதலுக்குரிய ராஜா திரு. குமரன் சேதுபதி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர்மீது பேரன்பு கொண்டிருந்தோர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்