Gold Price: அதிர்ச்சி! வரும் நாட்களில் தாறுமாறாக உயரப்போகும் தங்கம் விலை - காரணம் இதுதான்!
தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து உயரும் என்று தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகவும் மதிப்புமிக்க பொருட்களில் ஒன்றாக தங்கம் உள்ளது. தங்க வர்த்தகமானது உலகம் முழுவதும் பில்லியன் டாலர் மதிப்பில் நடைபெற்று வருகிறது. தங்க வர்த்தகத்தை பொறுத்தவரை தவிர்க்க முடியாத நாடாக திகழ்வது இந்தியா ஆகும்.
தொடர்ந்து உயரும் தங்கம் விலை:
இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தின் மீதான மோகமும், தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. பெரிய கோடீஸ்வரர்களுக்கு ஆடம்பர பொருளாக தங்கநகைகளை கருதினாலும், சாமனிய, நடுத்தர மக்களுக்கு தங்கம் என்பது அத்தியாவசிய பொருளாக உள்ளது. அவர்களது அவசர காலத் தேவைக்கு கைகொடுக்கும் பொருளாக தங்கம் உள்ளது.
ஆனால், 2000த்திற்கு பிறகே இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால் இந்தியாவில் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த சூழலில், கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை சாமானிய மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உச்சத்தை நோக்கிச் சென்று வருகிறது.
வரியை குறைத்தும் கட்டுக்குள் வராத விலை:
இதன்காரணமாக, கடந்த நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதம் குறைப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனால், பட்ஜெட் தாக்கலுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு குறைந்த தங்கம் விலை அதன்பின்பு மீண்டும் உச்சத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் சுமார் ரூபாய் 56 ஆயிரத்தில் விற்பனையாகி வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கிச் செல்லும் என தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தகவல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள கருத்தில், ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கி வைப்பு நிதிக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் வைப்பு நிதியில் இருந்து நிதியை எடுத்து தங்கமாக மாற்றி வருகின்றனர்.
ஏன் இவ்வளவு உயர்வு?
அமெரிக்காவின் மத்திய வங்கியும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்துள்ளது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. உலக பொருளாதாரம் பின்னடைவுக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதாலும், பல நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதாலும், முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களின் முதலீடுகளை தங்கமாக மாற்றி வருகின்றனர். இது தொடர்ந்து கொண்டே இருப்பதால் வரும் நாட்களிலும் தங்கம் விலை உச்சத்திற்குச் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார சூழல் மோசமாகி இருப்பதை பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவது மூலமே நாம் அறிய முடியும். இதன் காரணமாக, பலரும் பாதுகாப்பான முதலீட்டிற்காக தங்கம் பக்கம் திரும்பியுள்ளனர். இருந்தாலும் இந்தியா போன்ற நாட்டில் சாமானியரின் அத்தியாவசிய தேவையாக மாறியிருக்கும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர மீண்டும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.