Arvind Subramanian: சென்னையில் சிறகடித்து டில்லியில் பறந்த அரவிந்த் சுப்பிரமணியன்; இப்போது ஐவர் அணியில்!
அரவிந்த் சுப்ரமணியத்தின் ராஜினாமா மோடி அரசின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆனால் அது அரவிந்தின் சொந்த காரணத்துக்காக நடந்தது என கூறி முற்றுப்புள்ளி வைத்தார் அருண் ஜெட்லி.
சென்னையின் வீதிகளில் சிறகடித்து பறந்து பள்ளிப் படிப்பை முடித்த மாணவன் உலகின் உயரங்களை எல்லாம் தொட்டு, இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக மாறினார். அவரை மீண்டும் சென்னைக்கே அழைத்து வந்து, உலகத் தரத்துக்கு தமிழ்நாட்டை மாற்றுங்கள் என வாய்ப்பு கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
ஆம், முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருக்கும் அரவிந்த் சுப்ரமணியன் தான் அது. பள்ளிப்படிப்புக்கு பிறகு டெல்லி சென்ற அவர், புகழ்பெற்ற புனித ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பிறகு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பல்வேறு இடங்களில் பணியாற்றிய அரவிந்த் சுப்ரமணியன் ஒரு கட்டத்தில் சர்வதேச நிதி நிதியத்தில் சேர்ந்தார். முதலில் துணை இயக்குநராக அவருக்கு பதவிக்கு வழங்கப்பட்டது. பின்னர் முக்கிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். அந்த காலக்கட்டத்தில் ரகுராம் ராஜன் ஐ.எம்.எப்.பின் தலைமை பொருளாதார நிபுணராக இருந்தார். இருவரும் இணைந்து ஐ.எம்.எப்.பில் ஏற்பட்ட பல சிக்கல்களையும் அதன் கொள்கைகளில் இருந்த குழப்பங்களையும் தீர்த்தனர். அப்போது முதலே அரவிந்த் சுப்ரமணியத்தை பலரும் தங்களது பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளில் பயன்படுத்திக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவி காலியானது. ஆனால் ஒன்றரை வருடங்களாக அந்த பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இறுதியாக அரவிந்த் சுப்ரமணியம் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். 2014 முதல் 2018ம் ஆண்டு வரை இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தார். ஒரு கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்தார்.
அரவிந்த் சுப்ரமணியத்தின் ராஜினாமா மோடி அரசின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆனால் அது அரவிந்தின் சொந்த காரணத்துக்காக நடந்தது என கூறி முற்றுப்புள்ளி வைத்தார் அருண் ஜெட்லி. மோடி அரசின் மோசமான கொள்கைகளை தடுக்க எந்தவித முன்னெடுப்பும் இல்லை என்றும் ஆலோசகராக பொருளாதாரம் சார்ந்தவற்றில் தனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என கருதியதால் அரவிந்த் சுப்ரமணியன் கருதியதாக பலரும் குற்றம் சாட்டினர். ஆனால் அவை எதற்கும் அவர் பதில் சொல்லவில்லை. மாறாக நன்றிக் கடிதத்தை மட்டும் அனுப்பினார்.
பதவியை ராஜினினாமா செய்த பின் அரவிந்த் சுப்ரமணியன் வெளியிட்ட ஆய்வறிக்கை புயலைக் கிளப்பியது. 2011 மற்றும் 2016 நிதி ஆண்டுகளில் வெளியான உள்நாட்டு வளர்ச்சி விகிதம் உண்மையில்லை என்றார். ஆடிப்போனார்கள் அனைவரும். ஏனெனில் சொன்னவர் யாரோ வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி ஆள் இல்லை. உண்மையிலேயே ஆக்ஸ்போர்டில் படித்தவர், இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். அதோடு உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தை 2.5 மடங்கு அதிகரித்து காட்டியுள்ளனர் என்ற அவரது ஆய்வறிக்கையை எப்படி இல்லை என்பது என கூட்டங்கள் நடந்தன. கடைசியில் எங்கள் கணக்கீடு வேறு உங்கள் கணக்கீடு வேறு, நாங்கள் எடுத்துக் கொள்ளும் அளவீடு வேறு, நீங்கள் எடுத்துக் கொண்ட அள்வீடு வேறு என சமாளித்தார்கள்.
இந்த ஷாக் அடங்குவதற்குள் மோடி அரசின் பண மதிப்பிழப்பை கடுமையாக விமர்சித்தார் அரவிந்த் சுப்ரமணியன். அவர் எழுதிய புத்தகத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த தன்னிடம் இது குறித்து எந்த கருத்தையும் மோடி அரசு கேட்கவில்லை என்றார். அதோடு பண மதிப்பிழப்பு ஒரு மிகப்பெரிய கொடுமையான பணத்தின் மீது நடத்தப்பட்ட அதிர்ச்சி தாக்குதல் என்றார். இந்தியாவின் 86 சதவீத பணம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுவதை நார்த் ப்ளாக்கில் இருந்த எனது அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் என எழுதியிருந்தார் அரவிந்த்.
தமிழ்நாடு எதிர்த்த பல திட்டங்களை அரவிந்த் சுப்ரமணியனும் எதிர்த்துள்ளார். தமிழகத்தின் கண்ணோட்டத்தை ஒத்துப் போகும் இவரை பொருளாதார ஆலோசனை குழுவில் சேர்ப்பதன் மூலம், தமிழகத்தின் பார்வைக்கேற்ப திட்டங்களை வகுக்க முடியும் என நம்புகிறார் ஸ்டாலின். கனவு மெய்ப்படுமா?