Gayathri Raghuram Joins AIADMK: அரசியலில் பரபரப்பு..! அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்.
தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தனிப்பட்ட முறையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்துவந்தார் காயத்ரி ரகுராம். இதனால் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைமை அறிவித்தது. அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து தனது ராஜினாமா கடிதத்தை காயத்ரி ரகுராம் கொடுத்ததையடுத்து பாஜக தலைமை ஏற்றுக்கொண்டது.
எடப்பாடியார் என்னும் ஆளுமை தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கை....
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) January 19, 2024
வாழ்த்துக்கள் @Gayatri_Raguram pic.twitter.com/d5wXtQrI1i
தொடர்ந்து பாஜக மற்றும் அண்ணாமலை எதிர்த்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தார் காயத்ரி ரகுராம். மேலும், ஒரு சில சமயங்களில் பாஜக எதிராக கொள்கையை ஏற்றுகொண்ட அவர், ஆட்சியில் இருக்கும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வந்தார்.
இதையடுத்து, நடிகை காயத்ரி ரகுராம் திமுக அல்லது விசிகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது யாரும் எதிர்பார்க்காத வேளையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்பு அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்.
முன்பு ஒருநாள் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், “இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன். எந்த கட்சி அழைத்தாலும் அதில் இணைந்து மக்கள் பணியாற்றுவேன். என்னை அழைத்தால் திமுக அல்லது விசிகவில் இணைய தயார்’ என்று கூறியிருந்தார். இந்தநிலையில், தற்போது அதிமுகவில் இணைந்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த காயத்ரி ரகுராம்..?
நடிகையும், நடன இயக்குநரும், அரசியல்வாதி என பல்வேறு பரிமானங்களை கொண்டவர் காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குநர் ரகுராம் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த ப்சார்லி சாப்ளின் படத்தின் மூலம் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, விசில், விகடன், பரசுராம், வானம், காதலில் சொதப்புவது எப்படி, இது என்ன மாயம், தாரை தப்பட்டை, அருவம், யாதுமாகி நின்றாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா, மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றதுடன், 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பெரியளவில் பிரபலமானார்.
நடிப்பை தாண்டி அரசியல் ஆர்வம் காட்டிய இவர் கடந்த 2014ம் ஆண்டு அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். பின்னர் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் கடந்த 2015ம் ஆண்டு தமிழக பாஜக செயலாளராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டார். பாஜகவில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி கொண்ட காயத்ரி ரகுராம் தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். பாஜகவுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்த நிலையில் தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். பாஜகவில் இருந்து கொண்டு அந்த கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.
காயத்ரி ரகுராமின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். கட்சி நடவடிக்கை குறித்து பேசிய காயத்ரி ரகுராம், தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி அரசியலில் இருந்து விலகினார்.