C Vijayabaskar: விஜயபாஸ்கர் திமுக-விற்கு வருவதை தடுப்பது யார்? புதுக்கோட்டையில் நடப்பது என்ன?
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திமுக-வில் இணைவதற்கு தடு்ப்பணையாக இருப்பது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

அதிமுக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அனுபவமிகுந்த அமைச்சர்களில் ஒருவருமான விஜயபாஸ்கர் நேற்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததுடன் அதிமுக-வில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
விஜயபாஸ்கர் எந்த பக்கம்?
அதிமுக-வில் இருந்து விலகிய விஜயபாஸ்கர் அடுத்து எந்த கட்சியில் இணைவார்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. அவர் திமுக-வில் இணைவாரா? அல்லது தவெக-வில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் வரும் சனிக்கிழமை தவெக-வில் இணைவாரா? என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக-வில் தடுப்பது யார்?
ஆனால், விஜயபாஸ்கர் திமுக-வில் இணையவே தொடக்கத்தில் ஆர்வம் காட்டியுள்ளார். ஆனால், அவர் திமுக-வில் கால்தடம் பதிப்பது திமுக-வின் புதுக்கோட்டை வட்டாரத்திற்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, புதுக்கோட்டை மாவட்ட திமுக-வின் முக்கிய புள்ளிகளான முன்னாள் அமைச்சர் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் விஜயபாஸ்கரின் வருகையை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
ஏனென்றால், விஜயபாஸ்கர் தனக்கென தனி செல்வாக்கு கொண்ட நபர். தன்னுடைய தொகுதி மக்கள் அனைவரையும் சைக்கிளில் சென்று பார்ப்பதும், அடிக்கடி நேரில் சந்திப்பதும் என தொகுதி மக்களுடன் தொடர்ந்து நேரடி தொடர்பில் இருப்பதால் அவருக்கு தனி செல்வாக்கு உள்ளது. விராலிமலை தொகுதி மட்டுமின்றி புதுக்கோட்டை முழுவதுமே அவருக்கு தனி செல்வாக்கு உள்ளது.
காரணம் என்ன?
புதுக்கோட்டையில் மிகுந்த செல்வாக்கு உள்ள நபராக திகழும் விஜயபாஸ்கர் திமுக-வின் உள்ளே வந்தால் தங்களது செல்வாக்கு குறையும் என்று அவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் கருதுகின்றனர். மேலும், அறிவாலயம் நேரடியாக புதுக்கோட்டை மாவட்ட பொறுப்புகளை விஜயபாஸ்கரிடமே ஒப்படைக்கும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு நடந்தால் தாங்கள் சொந்த மாவட்டத்திலே புறக்கணிக்கப்படும் சூழல் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் விஜயபாஸ்கர் திமுக-விற்கு வருவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இவர்கள் மட்டுமின்றி விராலிமலை தொகுதியில் திமுக-வின் ஆஸ்தான வேட்பாளராக திகழும் செல்லப்பாண்டியனும் விஜயபாஸ்கர் கட்சியின் உள்ளே வருவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தான் திமுக-வில் இணைந்தாலும் அங்கு தலைமையில் இருந்து ஆதரவு கிடைத்தாலும் மாவட்ட கட்சி நிர்வாகிகளிடம் தனக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது என்றே விஜயபாஸ்கர் கருதுவதாக கூறப்படுகிறது.
தவெக-விற்கு தாவப்போகிறாரா?
அதேசமயம், ஆளுங்கட்சியாக திகழும் தவெக-வில் இணைந்தால் அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருப்பதுடன், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தவெக-வின் அமைச்சரவையில் அவருக்கு இடம் வழங்குவதற்கான வாய்ப்புகளும் பிரகாசம் என்று கூறப்படுகிறது. இதனால், அவர் தவெக-வில் இணைவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக-வில் எஞ்சியிருக்கும் எம்எல்ஏ-க்களை தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி போராடி வரும் சூழலில், விஜயபாஸ்கரின் விலகலால் அவருக்கு கட்சியில் மிகப்பெரிய நெருக்கடி உண்டாகியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















