பால்வளத்துறை அமைச்சர் எப்போது தமிழ்நாடு டி.ஜி.பி ஆனார்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் எப்போது தமிழ்நாடு டி.ஜி.பி. ஆனார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார்.
இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள், முக்கிய கோப்புகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த நிலையில், ஓரிரு தினங்களுக்க முன்பு கோவை மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் உள்ள முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை முதல் மாலை வரை திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவரது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள், கோப்புகள், கணினிகளை போலீசார் கைப்பற்றினர்.
மேலும், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் எஸ்.பி.வேலுமணிக்கு அடுத்தபடியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேட்டி அளித்ததாக தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
நாசர் எப்போ தமிழ்நாடு DGP ஆனாரு?.. இவரே முடிவு எடுத்து, இவரே ரெய்டு நடத்துவாரோ?#திமுக அமைச்சர்கள் 22 பேர் மேல லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்கு நிலுவையில் இருக்கே.. அதுக்கு எப்போ ஆக்ஷன் எடுப்பீங்க நாசர் சார்..? வேணும்னா சொல்லுங்க அந்த பட்டியல நான் தரேன். DVAC- ஐ முடுக்கி விடுங்க.... pic.twitter.com/rIXZKpxw9q
— DJayakumar (@offiofDJ) August 12, 2021
இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "நாசர் எப்போ தமிழ்நாடு டி.ஜி.பி. ஆனாரு?.... இவரே முடிவு எடுத்து, இவரே ரெய்டு நடத்துவாரோ? தி.மு.க. அமைச்சர்கள் 22 பேர் மீது லஞ்ச ஒழிப்பு உள்பட 83 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதுக்கு எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள் நாசர் யார்? வேண்டுமென்றால் அந்த பட்டியலை நான் தரேன். டிவிஏசி-ஐ முடுக்க விடுங்க” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் எதிர்க்கட்சியாக தி.மு.க. இருந்தபோது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துவது அ.தி.மு.க.வினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொறுப்பு வகித்த அனைத்து அமைச்சர்கள் மீதும் தி.மு.க.வினர் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். மேலும், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றால் நிச்சயம் அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அனைத்து அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக அரசின் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கைக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.