தடுப்பூசி அளவை அதிகரித்து வழங்கவேண்டும் - பிரதமருக்கு எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி கடிதம்
தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசி விநியோகம், ரெம்டெசிவிர் மருந்து மற்றும் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து ஆகியவற்றின் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிப்பு, ஆக்சிஜன் விநியோகம், ஐ.சி.யு. படுக்கைகள் அதிகரிப்பு, சாதாரண வார்டு படுக்கைகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுமட்டுமின்றி, கொரோனா தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்காக பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர், சுகாதாரத்துறையினர், மருத்துவர்கள் உள்பட பலரும் தமிழகத்தில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழகத்தில் வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த வாரம் 36 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு, தற்போது 28 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. இருப்பினும், கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் கொரோனாவால் தமிழகத்தில் முதன்முறையாக 493 நபர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதாக கூறினார். மேலும், மத்திய அரசிடம் இருந்து மேலும் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் வர வேண்டியுள்ளது என்றும் கூறினார். இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “தமிழகத்திற்கு தேவைப்படும் தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் ஊசிகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தை உடனே அதிகரிக்கவேண்டும். மேலும், தமிழ்நாட்டில் தற்போது கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் தீவிரமாக பரவி வருகிறது. அதற்கு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் லிப்போசமால் ஆம்போடெரிசின் பி 4 ஊசியின் விநியோகம் தமிழகத்தில் தற்போது குறைவாக உள்ளது. இதனால், இந்த மருந்தின் விநியோகத்தை அதிகரித்து கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்காக உலகளாவிய தடுப்பூசி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் விரைவில் உறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனார் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர். இதனால், அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக செங்கல்பட்டு எச்.எல்.எல். ஆலையையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை அதிகளவில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : 6 மணி நேரத்தில் ரூ.20 லட்சம் நிதி திரட்டிய யூடியூப்பர்ஸ்; ஆக்சிஜன் மையத்திற்கு வழங்குகிறார்கள்!