Jayakumar Case: 'கொலை முயற்சி' என்ற அரசு.. 'தொடவே இல்லை' என்ற ஜெயக்குமார்.. பரபரப்பு வாதம்!
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இரண்டாவது வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 9-ந் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து உத்தரவிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது இடையூறு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜெயக்குமார் இரண்டாவது வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். தேர்தல் நடத்தை முறைகளை மீறி சாலை மறியல் செய்ததாக 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெயக்குமார் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜெயக்குமார் தொடர்ந்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அவரது மனுவை நீதிபதி தயாளன் விசாரித்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இரண்டாவது வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 9-ந் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து உத்தரவிட்டார்.
பரபரப்பு வாதம்..
நீதிமன்ற விவாதத்தின் போது ஜெயக்குமார் தரப்பும், அரசு தரப்பும் மாறிமாறி தங்களது வாதங்களை முன்வைத்தனர். தங்கள் தரப்பை பேசிய ஜெயக்குமார் தரப்பு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட வழக்குகள் பெயிலில் வெளிவரக்கூடிய பிரிவுகள் எனவே ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டது. ஆனால் அதனை எதிர்த்து வாதிட்ட அரசு தரப்பு, ஜெயக்குமார் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 307-கொலை முயற்சி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கியுள்ளார். சாவடிங்கடா என வார்த்தைகளை கூறி மிரட்டியுள்ளார். அதை கருத்தில் கொண்டு 307 போடப்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டனர்.
மேலும், ஒரு முன்னாள் அமைச்சர், சட்டம் படித்தவர் இதுபோன்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். அன்றைய தினம் நரேஷை கொலை செய்திருப்பார்கள். அந்த வகையில் சம்பவம் நடந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பாதிக்கப்பட்ட நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
இந்த வாதங்களுக்கு எல்லாம் மறுப்பு தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு, 307-க்கான குற்றமே நடக்கவில்லை. புகார் கொடுத்தவரை மனுதாரர் ஜெயக்குமார் தொடக்கூட இல்லை. காயம் எதுவுமில்லை, எந்த அடிப்படையில் 506(2)- கொலை மிரட்டல் போடப்பட்டது. கொலை மிரட்டலே இல்லாத போது கொலை முயற்சி எப்படி வந்தது என கேள்வி எழுப்பினர்.
வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயக்குமாரின் இரண்டாவது வழக்கில் மார்ச் 9வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார்
நடந்தது என்ன?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது இடையூறு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாக்கு பதிவின்போது ஒருவரை பிடித்து தாக்குதல் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர், கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.