உணவு, உடை, கல்வி, அக்கறை... அன்பால் உலகை ஆளும் நிதர்சனம் அறக்கட்டளை!
நண்பர் ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் 20 மாணவர்களுடன் ஆரம்பித்த பயணம் இன்று, 250 மாணவர்களாக விரிவடைந்திருக்கிறது.
ஏழை மாணவர்களுக்கு இலவச மாலை நேரக் கல்வி, முதியோர்களுக்கு 2 வேளை உணவு, 3 மொழிகளில் தகவல் களஞ்சியப் பலகை, தனி செய்தி சேனல் மூலம் நேர்மறை செய்திகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளைத் தினந்தோறும் சத்தமில்லாமல் செய்து வருகிறது நிதர்சனம் அறக்கட்டளை.
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை அவர்கள் அடிக்கடி கேட்கும் வார்த்தை 'படி' என்பதுதான். 'முதலில் படி; பிறகு விளையாடு' என்பதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் முதல் வார்த்தையாக இருக்கிறது. அதற்கு பதிலாக வட சென்னையைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன் என்பவர், முதலில் விளையாடுங்கள்; பிறகு படிக்கலாம் என்று தன் பகுதி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இதனால், ஏராளமான மாணவர்கள் அவரின் இலவசப் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
நண்பர் ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் 20 மாணவர்களுடன் ஆரம்பித்த பயணம் இன்று, 250 மாணவர்களாக விரிவடைந்திருக்கிறது. பள்ளி முடிந்த பிறகு மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரை சதுரங்கம், கேரம், கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடச் சொல்கின்றனர். பின்னர் இரவு வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவர்களும் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர். விளையாட்டு உபகரணங்கள், அங்கு வசிக்கும் யாராவது ஒருவரின் வீட்டில் ஒப்படைக்கப்பட்டு விடுகின்றன.
இதுகுறித்து ஏபிபி நாடுவிடம் விரிவாகப் பேசினார் அந்த அமைப்பின் நிறுவனரும் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவருமான சாய் கிருஷ்ணன்.
''250 ஏழை மாணவர்கள் எங்களிடம் மாலை நேர வகுப்பில் படித்து வருகின்றனர். 6 ஆண்டுகளாக இந்த வகுப்புகளை நடத்தி வருகிறோம். எங்களிடம் படித்த மாணவர்கள் 16 பேர், கல்லூரியை முடித்துவிட்டோ, படித்துக்கொண்டேவோ ஆசிரியர்களாகவும் தன்னார்வலர்களாகவும் பணிபுரிகின்றனர்.
ஆதரவற்ற முதியோர்களுக்கு தினசரி உணவு
ஒவ்வொரு மாதமும் மளிகை, துணி உள்ளிட்ட பொருட்களை ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறோம். தமிழகம் முழுவதும் வெவ்வேறு அமைப்புகள் நடத்தும் இலவச டியூஷன் வகுப்புகளுக்கு நிர்வாக ரீதியில் ஆலோசனைகளை அளித்து வருகிறோம். அந்த வகையில் திருத்தணி, நீலகிரி உள்ளிட்ட 22 மையங்களுக்கு வாட்ஸப் குழு மூலம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
வறுமை, முதுமை, தனிமையில் இருப்போருக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களின் இடத்துக்கே சென்று தினந்தோறும் மதியம், இரவு என 2 வேளை உணவு அளித்து வருகிறோம். இதற்கான உணவை மனைவியும் இன்னும் இருவரும் தயாரிக்கின்றனர். தன்னார்வலர்கள் அவற்றை பேக் செய்வதிலும் கொண்டுபோய்க் கொடுப்பதிலும் உதவுகின்றனர். முதியவர்களின் குடிசை வீடுகள் சேதமடைந்தால் சீரமைத்தும் தருகிறோம். நிராதரவான முதியவர்கள் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கமும் செய்கிறோம்.
தனி செய்தி சேனல்
இந்த காலகட்டத்தில் கொலை, கொள்ளை மாதிரியான குற்ற செய்திகளே அதிகமாக வெளியாகின்றன. அதனால் நேர்மறையான, நல்ல செய்திகளைக் கொண்டு வரவேண்டும். அதேபோல நிதர்சனம் அறக்கட்டளை மூலம் செய்யும் உதவிகளையும் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் யூடியூபில் 10 மாதங்களுக்கு ஒரு செய்தி சேனலை ஆரம்பித்தோம். கையில் மொபைல் இருந்தது. ஸ்டாண்ட் மட்டும் வாங்கினோம்.
எங்களின் இளைஞர்களே படம்பிடிக்கவும், எடிட்டிங் செய்யவும் கற்றுக்கொண்டனர். இரண்டு பெண்கள் செய்தியை வாசிக்கக் கற்றுக் கொண்டனர். தினந்தோறும் இந்த காணொலி செய்தியை https://www.youtube.com/channel/UCE8FcrT68eyA0YJ0ig9_TTg/videos என்ற யூடியூப் பக்கத்தில் பதிவேற்றுகிறோம். இதைப் பார்த்துவிட்டு அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ், எழும்பூர் ஐஜி அலுவலக டிஎஸ்பி கோபால், மருத்துவர் ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் பார்த்து ஊக்கப்படுத்தியுள்ளனர்.
3 மொழிகளில் தகவல் பலகை
எங்கள் மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நிறைய ஆசை உள்ளது. ஆனாலும் அவர்களின் ஏழ்மையால் பொருளாதார ரீதியாக உதவ முடியவில்லை. வசதி இருந்தால்தான் உதவலாம் என்றில்லை. அறிவுசார் வகையில், தகவலைப் பகிர்ந்தும் உதவலாமே என்று அவர்களுக்குச் சொன்னோம்.
பள்ளி மாணவர்கள் சிலரிடம் வெண்ணிறப் பலகை ஒன்றையும் அதில் எழுதப் பலகையையும் வாங்கிக் கொடுத்தோம். அதில் நாங்கள் அளிக்கும் தகவலை தினந்தோறும் எழுதி, வீட்டுக்கு வெளியே மாட்டச் சொன்னோம். இதன்மூலம் அந்த வழியாகச் செல்வோர் எல்லாம் அதைப் படித்துப் பயனடைந்து வருகின்றனர். 6 வருடங்களாக இதைச் செய்துவருகிறோம்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் சிலவற்றிலும் மாணவர்கள் எழுதி வருகின்றனர். 14 பேருடன் சென்னை, பெரம்பூரில் ஆரம்பித்த பலகை பயணம், இன்று திருச்சியில் 100, சேலத்தில் 50, செய்யாறு, காஞ்சிபுரம் எனத் தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் தினமும் எழுதப்பட்டு வருகிறது.
முதலில் தமிழ் மொழியில் மட்டும்தான் எழுதிக் கொண்டிருந்தோம். இப்போது ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் எழுதி வருகிறோம். அவற்றில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து வாட்ஸப் குழுவில் தினமும் அனுப்புகிறோம். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் நிறையப் பேர் எங்கள் தகவல் பலகையைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.
எங்களின் அறக்கட்டளைக்கு 10 பேர் மாதாந்திரக் கொடையாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மூலமும் பிறந்தநாள், திருமண நாளுக்கு உதவும் சிலர் மூலமும் நன்கொடை கிடைக்கிறது. இந்த உதவியை இன்னும் முழுவீச்சில் விரிவுபடுத்த எங்கள் மாணவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்'' என்கிறார் சாய் கிருஷ்ணன்.
அன்பால் உலகை ஆள்வோம்.