மாயனூர் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு, காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 2 லட்சம் கன அடியாக அதிகரித்தது. இதனால் கரையோர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாயனூர் கதவணைக்கு 2 லட்சம் கனஅடி நீர்வரத்து
காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு, காலைநிலவரப்படி தண்ணீர் வரத்து 2 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 871 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, இரண்டு லட்சத்து 3 ஆயிரத்து 759 கன அடியாக தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதி சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் 2 லட்சத்தில் 2,539 கன அடி தண்ணீரும் நான்கு பாசன வாய்க்கால்களில் 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணையில் தண்ணீரின் அளவு
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையின் காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 534 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்கால்களில் 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 77.40 அடியாக இருந்தது. கரூர் அருகே பெரிய ஆண்டாள் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 1057 கன அடி தண்ணீர் வந்தது.
நங்காஞ்சி அணையில் தண்ணீரின் அளவு
திண்டுக்கல் மாவட்டம், நங்கஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 32.81 கனஅடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணையில் தண்ணீரின் அளவு-
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 151 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 20.33 அடியாக இருந்தது. அணையில் இருந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மி.மீ)
கரூர் மாவட்டத்தில், காலை 8 மணி வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு கரூரில் 8.2 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 2.6 மில்லி மீட்டர், க. பரமத்தியில் 9.8 மில்லி மீட்டர் அளவுகளில் மழை பதிவானது.
மாயனூர் கதவணையில் இருந்து 2, 04,000 கன அடி நீர் வெளியேற்றம்.
மேட்டூரிலிருந்து காவிரி கதவணைக்கு வரும் 2,04,000 கன அடி தண்ணீர் அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்படுவதால், பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணைக்கு மேட்டூர் அணையிலிருந்து 2,04,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அதில் 2,04,000 கன அடி தண்ணீர் அப்படியே காவிரி மற்றும் பாசன வாய்க்கால் மூலம் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரி கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்றும், காவேரி கரையோரம் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் சராசரியாக 1.72 மில்லி மீட்டர் மழை பதிவானது மழை பதிவானது.