Video: தவெக மாநாட்டிற்குச் சென்ற இளைஞர் மாயம்.! கண்டுபிடித்து தருமாறு கண்ணீரில் தந்தை .!
Tvk Conference: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடுக்கு சென்ற இளைஞர் காணாமல் போன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இளைஞர் மாயம்:
இந்த தருணத்தில், விஜய்யின் தவெக மாநாடுக்கு சென்ற திருவாரூரைச் சேர்ந்த 32 வயது வாலிபர் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மகனை காணவில்லை என அவரது தந்தை கதறி அழும் வீடியோ அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், விளாங்காடு ஊராட்சி, கரையங்காடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி புஷ்பநாதனின் மகன் மேகநாதன்(32). டிப்ளோமா படித்துவிட்டு டிவி மெக்கானிக் வேலை பார்த்து வரும் மேகநாதன் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் தனி கட்சி துவங்கியதையடுத்து, மேகநாதன் அக்கட்சியில் இணைந்து கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 27ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்நிலையில் அன்று காலை முத்துப்பேட்டை பகுதிலிருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஏராளமான பேருந்துகள் மற்றும் வேன்கள் மூலம் மாநாடுக்கு சென்று இருந்தனர். அதில் மேகநாதனும் ஒருவர்.
தந்தை புகார்:
இந்நிலையில் மாநாடு முடிந்து பேருந்து ஊர் திரும்ப புறப்பட்டபோது மேகநாதன் மட்டும் பேருந்தில் ஏறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து உடன் வந்த தொண்டர்கள் அவருக்கு போன் போட்டு கேட்டபோது பெட்ரோல் பங்கில் நிற்பதாக கூறி உள்ளார். ஆனால் அங்கு சென்று பார்த்த போதும் அங்கு அவர் இல்லை. அவரது செல்போனும் சுச் ஆப் ஆகி இருந்ததால், அவர் இல்லாமல் பேருந்து ஊர் திரும்பியுள்ளது.
கண்ணீரில் தந்தை:
ஆனால் மாநாடு முடிந்து நாட்கள் கடந்தும் மேகநாதன் இது நாள்வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதர்ச்சியடைந்த அவரது தந்தை புஷ்பநாதன் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் ‘’ஒரே மகன், தாய் இல்லாததால் மிகவும் பாசத்துடன் வளர்த்தேன் மாநாடுக்கு சென்று எல்லோரும் திரும்பிய நிலையில் எனது மகன் மட்டும் காணாமல் போய்விட்டார்’’ எப்படியாவது மகனை கண்டுபிடித்து தருமாறு அவர் கதறி அழுதுள்ளார்.
தவெக மாநாடுக்கு சென்ற இளைஞர் காணாமல் போன சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.