பஞ்சுதான் தீவனம்; 60 ஆண்டு கால உபரிநீர்த் திட்ட கோரிக்கை நிறைவேறுமா? விவசாயிகள் வேதனை
40 ஆண்டுக்கு மேலாக கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- தமிழக அரசு க. பரமத்தி பகுதியை வறண்ட பகுதியாக அறிவித்து நிதிகளை ஒதுக்கி தனி கவனம் செலுத்த வேண்டும்- வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை.
க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளை வறண்ட பகுதியாக அறிவித்து பாதுகாக்கட வேண்டும், கால்நடைகளுக்கு பருத்தியை தீவனமாக வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் அமராவதி ஆற்றிலிருந்து உபரி நீரை கொத்தம்பாளையம் தடுப்பணையிலிருந்து 360 ஏக்கரில் அமைந்துள்ள தாதம் பாளையம் ஏரிக்கு கொண்டு செல்லும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகும். இத்திட்டத்தினை செயல்படுத்தக் கோரி, இப்பகுதி விவசாய மக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
2002 ஆம் ஆண்டு 16 கோடி மதிப்பில் நஞ்சை தலையூர் முட்டணையில் இருந்து, தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல அமராவதி வெள்ள உபரிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் ஆண்டுதோறும் அமராவதி ஆற்றில் வரும் உபரி நீரினை, இயற்கையாக அமைந்த குளங்கள் வழியாகவே கொண்டு சென்று நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் செறிவூட்டுதல் ஆகும்.
நிலத்தடி நீரை செறிவூட்டும் இத்திட்டத்தின் படி, அரவக்குறிச்சி வட்டம், 26 ஊராட்சிகளான ,நடந்தை தென்பாகம், ஆரியூர், பி.அணைப்பாளையம் மற்றும் புகலூர் வட்டம் பவித்திரம் ஊராட்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள இயற்கையாகவே அமைந்த 33 குளங்கள் வழியாக நீரானது கொண்டு செல்லப்படும். மேலும் இப்பகுதிகளில் இயற்கையாக தோண்டப்பட்ட 1120 கிணறுகள், 2400க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் 40 சிறிய தடுப்பணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இப்பகுதிகளில் உள்ள 5000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் நீர் பாசன வசதி பெறுவதோடு மக்களின் குடிநீர் பிரச்சனையும் தீரும். இத் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு ஆண்டிசெட்டிபாளையம் முதல் கொத்தம்பாளையம் வரை இயற்கையாகவே அமைந்த கரை வழியானது 14 கிலோ மீட்டர் அமைந்துள்ளது இதனால் இந்தத் திட்டத்திற்கு வாய்க்கால்கள் ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்காது. இப்பகுதிகளில் நிலத்தடி நீரானது 1000 அடிக்கும் கீழ் சென்று விட்டது.
ஆண்டுதோறும் கோடை காலங்களில் க.பரமத்தி பகுதிகளில் வெயிலானது 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகிறது. இதனால் வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி நிலங்கள் வறட்சியடைந்து பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகும்.
முன்னர் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் பருவமழைக் காலங்களில் முருங்கை வளர்ப்பு, நிலக்கடலை, மிளகாய் மற்றும் மானாவாரிப் பயிர்களான எள், கம்பு, சோளம், பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு மற்றும் ஆமணக்கு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக பருவ மழை இல்லாத காரணத்தினால் இப்பகுதிகளில் உள்ள கிணறுகள் முற்றிலும் வறண்டு போனதால் முருங்கை வளர்ப்பு, மானாவாரி பயிர்கள் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பும் குறைந்து விட்டது. தற்போது எங்கும் வறண்டு காணப்படுகிறது.
தண்ணீர் இல்லாததால் கால்நடைகளுக்கு தீவனங்கள் இப்பகுதியில் வளராததால் வெளியில் இருந்து பருத்தி பஞ்சுகளை வாங்கி வந்து அதனை உணவாக கொடுத்து வளர்த்து வருவதாகவும், மேலும் தொழிலும் நலிவடைந்து வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது நிறைவேற்றப்பட்டால் 5000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் நீர் பாசன வசதி பெறுவதோடு மட்டுமல்லாமல் மக்களின் குடிநீர் பிரச்சினைகளும் தீரும்.
தற்போதுள்ள மானாவாரி நிலங்கள் அனைத்தும் நன்செய் நிலங்களாகும். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பயனடைவர். விவசாயம் செழிக்கும் மற்றும் கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி அடையும். மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தப்படுவதால் அரவக்குறிச்சி வட்டத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான கிராமங்களின் குடிநீர் பிரச்சினையும் தீரும்.
இதனால் தமிழக அரசு உடனடியாக கொத்தம்பாளையம் தடுப்பணையில் இருந்து உபரி நீரை தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீரை கொண்டு செல்லும் திட்டத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 60 ஆண்டுக்கு மேலாக கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தமிழக அரசு க. பரமத்தி பகுதியை வறண்ட பகுதியாக அறிவித்து நிதிகளை ஒதுக்கி தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.