Pandu Death: நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நகைச்சுவை நடிகராக வலம் வரும் நடிகர் பாண்டு, இன்று காலமானார்.
பிரபல நகைச்சுவை-குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானர். அவருக்கு வயது 74. கொவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஓவியரான பாண்டு, கலைத்துறையில் பல்வேறு திறமைகள் கொண்டவர். குறிப்பாக ஓவியம் தான் அவரது அடையாளமாக இருந்துள்ளது. இருப்பினும் சினிமாவில் அவர் பரிட்சையம் காரணமாக பலருக்கு அவர் சினிமா நடிகராகவே அறியப்படுகிறார். இன்று வரை தனது ஓவியத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார் பாண்டு.
அதீத நகைச்சுவை ஆற்றல் கொண்டவர் என்பதால் அன்றிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் என்று மட்டும் இல்லாமல், குணசித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்தவர் நடிகர் பாண்டு. அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு.