Erode East By Election: கமலுடன் கைகோர்க்கிறதா காங்கிரஸ்..? செய்தி சொன்ன ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்... இடைத்தேர்தலில் ட்விஸ்ட்..!
முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து இளங்கோவன் ஆதரவு கேட்டு வருகிறார். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை கோரி கமலை இளங்கோவன் சந்தித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார்.
கமலின் ரத்தத்தில் காங்கிரஸ்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து இளங்கோவன் ஆதரவு கேட்டு வருகிறார். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை கோரி கமலை இளங்கோவன் சந்தித்துள்ளார்.
முக்கியத்துவம் வாயந்த இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த இளங்கோவன், கமலின் ரத்தத்தில் காங்கிரஸ் கலந்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக கூட்டணியில் கமல் சேர வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்தேன். கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு முடிவை சொல்வதாக கூறினார். கமல் ரத்தத்தில் தேசியமும் காங்கிரஸ் கட்சியும் கலந்துள்ளது எல்லோருக்கும் தெரியும். அவரது தந்தை காங்கிரஸ் கட்சியில் தியாகியாக இருந்தவர்.
மறைந்த தலைவர் காமராஜருடன் நெருக்கமான நண்பராக இருந்தவர். காங்கிரஸையும் கமலையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. ஆதரவு தெரிவிப்பது மட்டும் இன்றி திமுக கூட்டணிக்கு அவர் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் கூறி இருக்கிறேன்" என்றார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2021 தேர்தலை போலவே இந்த முறையும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக. ஆனால், வேட்பாளர் தேர்வில் தொடர் குழுப்பம் நிலவி வந்தது.
மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை இளங்கோவனை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் மேலிடமும் திமுகவும் விரும்புவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என இளங்கோவன் கூறினார்.
மேலும், இந்த இடைத்தேர்தலில் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட முனைப்பு காட்டி வந்ததாகவும் கூறப்பட்டது. எனவே, வேட்பாளர் தேர்வில் தொடர் குழுப்பம் நீடித்து வந்தது. இறுதியில், இளங்கோவனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.





















