Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் யார்? என்ற அறிபிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் அறிவிப்பு
தமிழக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், “ ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது.
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் யார்?
கடந்த 2021ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ஈரோடு கிழக்கு தொகுதி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதில் ஈ.வெ.ரா. திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழக்கவே, 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரும் சோகமாக உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆண்டு அவரும் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே அந்த தொகுதி மீண்டும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் முக்கிய திருப்பமாக திமுகவே இந்த இடைத்தேர்தலில் நேரடியாக களம் காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திமுக கொள்கை துணை பரப்பு செயலாளர் வி.சி. சந்திரகுமார் அல்லது ஈரோடு தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோரிடையே வேட்பாளராக களமிறங்க கடும் போட்டி நிலவுகிறது. வேட்பாளர் யார் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸுக்கு ”நோ” ஏன்?
காங்கிரஸ் கட்சியினர் களப்பணி ஆற்றுவதில் சுணக்கம் காட்டுகின்றனர், அவர்களுக்கான தொகுதியில் கூட திமுகவினரே வேலை செய்ய வேண்டியுள்ளது என்பது அக்கட்சி நிர்வாகிகளின் நீண்ட கால குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த இடைத்தேர்தலின்போது கூட, திமுகவினரே பணத்தை கொட்டி காங்கிரஸை வெற்றி பெறச் செய்ததாக அக்கட்சியினர் குமுறுகின்றனர். அதோடு, எத்தனை முறை தான் அந்த தொகுதி கூட்டணி கட்சிக்கே ஒதுக்கப்படும் எனவும், நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். அதன் விளைவாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவே களமிறங்கவே முடிவெடுத்துள்ளது. அதோடு, வெற்றி பெறுபவர்களுக்கான பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே உள்ளது என்பதால், காங்கிரசும் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

