Erode East By Election: ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் யாருக்கு இரட்டை இலை சின்னம் ? ஆதரவாளர்கள் யாருக்கு அதிகம்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக ஈ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவாளர்கள் அதிகம் இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து ஈரோடு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக தரப்பில் கூட்டணி கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் அறிவித்தது முதல் திமுக வாக்கு சேகரிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க அதிமுக தரப்பில் பல குழப்பங்கள் இருந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக (எடப்பாடி தரப்பு) வேட்பாளராக, தென்னரசு என்பவரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக உள்ள, முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைதேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். தொடர்ந்து, வேட்பாளர் செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சென்னையில் பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.
இருவரும் தனித்தனியே வேட்பாளர்களை களம் இறக்குவதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த பதில் மனுவில், ”இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை. அதிமுக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஒரு தரப்பை அங்கீகரிக்க முடியாது எனவும் கூறியது. இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு, கட்சியின் நலனை கருதியும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காகவும் நிபந்தனையை ஏற்பதாக ஓபிஎஸ் தரப்பில் சொல்லப்பட்டது. எனவே அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்துப் போட தயார் என கூறப்பட்டது. உடனே வேட்புமனுவுடன் சமர்பிக்கப்படும் ஏ,பி படிவங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவாரா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
சமாதான பேச்சுக்கே இடமில்லை என சொன்ன இபிஎஸ் தரப்பிடம், நீதிமன்றம் கூறும் யோசனையை ஏற்காவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு இருதரப்பும் ஏன் ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்றும், ஒருதரப்பும் கையெழுத்திடாமல் பொதுவான ஒருவரை பொதுக்குழு சார்பில் கையெழுத்திட அனுமதித்தால் என்ன எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும் இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்ய மட்டும் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என கருத வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனிடையே ஓபிஎஸ், இபிஎஸ், தேர்தல் ஆணையம் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யுமென்றும், பொதுக்குழுவின் முடிவை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் அவைத்தலைவரின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் எனவும், பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்ப மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் ஓபிஎஸ் – ஈபிஎஸ் தரப்பில் என்ன முடிவெடுக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுக்குழு அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 2539 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல் 70 மாவட்ட செயலாளர்கள், 755 ஒன்றியச் செயலாளர்கள், 61 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
அதேபோல், ஓ. பன்னீர் செல்வத்திற்கு 136 பொதுக்குழு உறுப்பினர்கள், 5 மாவட்ட செயலாளர்கள், 30 ஒன்றியச் செயலாளர்கள், 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. எடப்பாடி தரப்புக்கே ஆதரவு அதிகம் இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்கள் தந்த ஒப்புதல் படிவங்களை சமர்ப்பித்த பின் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொறுத்து இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா இல்லை ஒதுக்கப்படுமா என தெரிய வரும்.