Erode SH20 Project: ஈரோட்டிற்கு வந்த அப்கிரேட், மேம்பாலத்துடன் இரட்டை இருவழிச்சாலை - அண்டை மாநிலங்களுக்கு பயணம் ஈசி
Erode SH20 Project: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை 20-ஐ விரிவாக்கம் செய்ய, மத்திய அரசு 36 கோடியே 45 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது.

Erode SH20 Project: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை 20-ஐ விரிவாக்கம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
ஈரோடு சாலை விரிவாக்க திட்டம்
மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் சில சாலை மேம்பாட்டு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், ஈரோடு, திருப்பூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கான சாலை விரிவாக்க திட்டங்கள் இடம்பெற்று உள்ளன. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும், சாலை விரிவாக்க திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயண நேரத்தை மிகவும் கணிசமாக குறைக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில நெடுஞ்சாலை 20 விரிவாக்க திட்டம்:
மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை 20வது தான் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. நகரில் 9 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை, ஆர் என் புதூரை தொடர்ந்து அதன் முடிவில் தேசிய நெடுஞ்சாலையான NH 544H உடன் இணைகிறது. அதன் வழியாக பவானி, மேட்டூர் மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளுக்கு பயணிக்க முடியும். சாலையின் தெற்கு முனை ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தையும், வடக்கு முனை ஆர்என் புதூரையும் இணைக்கிறது.
முக்கிய சந்திப்புகள்:
இந்த சாலையானது தேசிய நெடுஞ்சாலை NH 381A, ஈரோட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலை 79 மற்றும் 15, ஈரோடு மாவட்டம் அக்ரகாரம் பகுதியில் உள்ள Ring Road (MDR-62) ஆகியவற்றையும் இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாலை விரிவாக்க திட்டம்:
ஈரோட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலை 20 விரிவாக்கத்திற்காக, மத்திய அரசு சுமார் 36 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தற்போதுள்ள 9 கிலோ மீட்டர் தூர சாலையானது, இரட்டை இருவழிப் பாதையாகப் பிரிக்கப்பட்டு பாதை விரிவுபடுத்தப்பட உள்ளது. அதாவது இருபுறங்களில் வாகனங்கள் வந்து செல்வதற்கு என மொத்தமாக நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தப்பட உள்ளது. நடைபாதை சாலை பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 2.9 கி.மீ.க்கு மேல் உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட உள்ளது. மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
சாலை விரிவாக்கத்தின் பலன்கள்:
ஈரோட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலை 20 விரிவாக்க திட்டப்பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, பொதுமக்கள் பல்வேறு பலன்களை எதிர்பார்க்க முடியும். குறிப்பாக போக்குவரத்து நெரிசல் குறைந்து பயணம் எளிதாகும். அதன்படி, தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய பேருந்து நிலையமான ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்கான இணைப்பு எளிதாகும். அந்த பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து பிரதான நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் புதிய சாலை (SH-20) விரிவாகக் திட்டம் நேரடியாக, தேசிய நெடுஞ்சலை உடன் இணைவதால், மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கான பயண நேரமும் வெகுவாக குறையும்.
CRIF இன் கீழ் ஒதுக்கப்பட்ட இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள், பிராந்திய பொருளாதார நடவடிக்கைகளை கணிசமாக அதிகரிக்கும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















