24 மணிநேரத்தில் இத்தனை க்ரைமா? - லிஸ்ட் போட்டு திமுக ஆட்சியை வறுத்தெடுத்த இபிஎஸ்!
தமிழ்நாட்டின் தலைநகரில் தனது வீட்டின் முன்னாலேயே ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 2 படுகொலை சம்பவங்களும் ஒரு கொலை முயற்சியும் நடைபெற்றதாகவும், இனி மக்கள், நமக்கு நாமே பாதுகாப்பு என்றுதான் இருக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5ஆம் தேதி, சென்னை பெரம்பூர் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டியது. 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 மர்ம நபர்கள் ஆம்ஸ்டிராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
பலத்த காயமடைந்த ஆம்ஸ்டிராங், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிக்குப் பழியா?
இதுதொடர்பாக 8 பேர் சரணடைந்த நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு சுரேஷ் என்பவரின் கொலை வழக்கில் பழிக்குப் பழி வாங்கவே இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். விசிக தலைவர் திருமாவளவன், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உள்ளிட்டோரும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே தமிழ்நாட்டின் தலைநகரில் தனது வீட்டின் முன்னாலேயே ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்திற்குள் 2 படுகொலை சம்பவங்களும் ஒரு கொலை முயற்சியும் நடைபெற்றதாகவும், இனி மக்கள், நமக்கு நாமே பாதுகாப்பு என்றுதான் இருக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகள்:
’’கடந்த 24 மணி நேரத்திற்குள் வந்த செய்திகள்:
● புதுக்கோட்டையில் மர்ம நபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை.
● தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை.
● தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.
இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை. எனவே, மக்கள் பணியில்தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு!’’
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.