EPS Case: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்ற இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு
லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வழக்கு:
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக கூறி, 2018ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணை
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளதால், அவர்களே விசாரணையை தொடரட்டும் எனத் தெரிவித்து மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என் ஆர்.இளங்கோ அனுமதி கோரினார். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் கவுதம், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ஏற்கனவே இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி விஜிலென்ஸ் கமிஷனருக்கு அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு:
அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையின் மீது விஜிலென்ஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்காத வகையில், தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். அப்போது குறிப்பிட்ட அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Also Read: "அதிமுகவின் நலன்கருதி ஒரு தாய் பிள்ளைகளாக ஒன்றிணைவோம் எதிரிகளை வென்றிடுவோம்" - சசிகலா