EPS Amit Shah Meeting: அமித்ஷாவை சந்தித்து அரசியல் பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பின்போது அரசியல் ஏதும் பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவை தோல்விக்கு பிறகு முதன்முறையாக டெல்லிக்கு சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். இந்த டெல்லி பயணத்தின்போது அதிமுக சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கமணி, வேலுமணி, மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், அதிமுக எம்.பி. ஓ.பி.ரவிந்திரநாத், ஆகியோர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி,
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தோம் எனவும் தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசியை வழங்க வலியுறுத்தியதுடன், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும், தமிழ்நாட்டில் 16 மாவட்டங்கள் காவிரி நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளன. எனவே மேகதாது அணை கட்ட மத்திய அரசு உதவக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தோம் என்றார். மேலும், நீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டோம், தமிழகத்தில் பல்வேறு சாலைகளை அமைக்க மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ள நிலையில் அதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்வதை தடுத்து நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.
இந்த நிலையில் இன்றைய தினம் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு தொடர்பாக இன்றையதினம் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனவும், இந்த சந்திப்பில் அரசியல் ஏதும் பேசவில்லை” என்றார். அதிமுக முன்னாள் எம்.பி அன்வர்ராஜா ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தனது பேட்டியை அவர் முடித்துக் கொண்டார்.