புதுச்சேரியில் மின்சாரப் பேருந்து சேவை: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! புதிய வழித்தடங்களில் பயணம்
புதுச்சேரி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 10 ஏ.சி., பேருந்துகள், 15 ஏ.சி., இல்லாத பேருந்துகள் என மொத்தம் 25 மின்சார பேருந்துகளின் சேவை துவக்கம்.

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 25 மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் முதல் முறையாக எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கம்
புதுச்சேரியில் முதல் முறையாக எலெக்ட்ரிக் பேருந்துகள் இன்று முதல் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 10 ஏ.சி., பேருந்துகள், 15 ஏ.சி., இல்லாத பேருந்துகள் என மொத்தம் 25 மின்சார பேருந்துகளின் சேவையை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த 25 மின்சார பஸ்கள் இன்று முதல் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. இந்த மின்சார பேருந்துகளுக்கு தேவையான சார்ஜ் ஸ்டேஷன், மின்சார வாகன பணிமனை தாவரவியல் பூங்கா எதிரே உள்ள இடத்தில் 1.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பேருந்துகளை இன்று காலை 10:00 மணியளவில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைக்க வைத்தனர்.
இதற்கான உட்கட்டமைப்பு பணிகளை, போக்குவரத்து துறை தனியாருடன் இணைந்து ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த மின்சார பேருந்துகளை போக்குவரத்து துறை கொள்முதல் செய்ய வில்லை. தனியார் நிறுவனம் 25 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்குகிறது.
இந்த மின்சார பேருந்துகள் நகர பகுதியில் பல்வேறு புதிய வழித்தடங்களில் இயக்கப்படும்போது கிடைக்கும் டிக்கெட் கட்டணம், அரசின் மானியம் இரண்டும் ஒரே கணக்கில் வரைவு வைக்கப்படும். அதன் பிறகு ஏ.சி., இல்லாத மின்சார பேருந்துகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 62 ரூபாய், ஏ.சி., பேருந்துகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 63.85 ரூபாய் வீதம் கணக்கிட்டு எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்கும் நிறுவனத்திற்கு அரசு செலுத்தும்.
மின்சார பேருந்துகள் மொத்தம் 9 மீட்டர் நீளம் கொண்டது. 36 பேர் வரை பயணம் செய்யலாம். 15 பேர் வரை நின்றும் பயணம் செய்யலாம். இந்த பேருந்துகள் அனைத்து ஜி.பி.எஸ்., கண்காணிப்பில் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. பெருதுகளை இயக்கவிட்டால் அபராதம் விதிக்கப்படவும் உள்ளது.
இந்த மின்சார பேருந்து சேவையுடன், மின் பேருந்து பணிமனை, இ-ரிக் ஷாக்கள், ஸ்மார்ட் நிழற்குடைகள், முன் பதிவு செயலியும் இணைந்து பொதுமக்களின் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்ற மின்சார வாகனங்களை இயக்க மாநிலங்களை, மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
அதற்கேற்ப புதுச்சேரியிலும் பொது போக்குவரத்துகளில் காற்று மாசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





















