எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக்கூடாது: இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த ஓபிஎஸ்..!
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.
ஓபிஎஸ் மனு
அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் கடந்த 12ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி புருசந்திரா குமார் கவ்ரவ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 10 நாட்களில் ஆணையம் முடிவு எடுக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.
இரட்டை தலைமை பிரச்சனை
அதிமுகவில் பல மாதங்களாகவே இரட்டை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வந்தது. இந்த பிரச்சனையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். முதலில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இந்த பொதுக்குழு செல்லும் என வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து குறிப்பிடப்படாததால் அதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது.
இதனை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த வழக்கிலும் இபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க மட்டுமே தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், ஓபிஎஸ் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியானதும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
”இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது"
இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் 10 நாட்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து, ஓபிஎஸ் தரப்பில் பெங்களூர் புகழேந்தி சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, இன்று ஓ.பன்னீர்செல்வம் இதே போன்று ஒரு மனு அளித்துள்ளார். அதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் நான் நீடிக்கிறேன். இந்த பதவி காலாவதியாகவில்லை. அதனால் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.