Kodanad Case: "எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்கள் மூலம் ரூ. 2000 கோடி பேரம் பேசினார்" - தனபால் பரபரப்பு பேட்டி
எனக்கு அமைச்சர் பதவியும் தருவதாக அப்போதே எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கனகராஜிடம் தெரிவித்திருந்தார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக இருந்த கனகராஜின் சகோதரர் தனபால் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "எனக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை. நான் நன்றாக உள்ளேன். நான் மனநலம் பாதிக்கப்பட்டவன் எனக் கூற, சவுக்கு சங்கர் மற்றும் இளங்கோவன் மருத்துவர் அல்ல. இது தொடர்பாக டிஐஜியிடம் புகார் கொடுக்க சென்று வந்தேன். கோடநாடு வழக்கில் 100 நாள் ஆன பிறகு எனக்கு பெயில் வழங்கினார். மற்றபடி மனநலம் பாதிக்கப்பட்டு நான் வெளியே வந்தேன் என்பது தவறானது. என் மனைவி, எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். என்னை திமுக, ஓபிஎஸ், டிடிவி இயக்கவில்லை எடப்பாடி பழனிசாமி மற்றும் இளங்கோவன் இயக்குகின்றனர். அதேபோன்று ஓபிஎஸ் என்னை சிறையில் வந்து சந்தித்தார் என்பதும் தவறான ஒன்று. வரும் 14 ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராவதை தடுப்பதற்காக எடப்பாடி பழனிசாமி, இளங்கோவன் முயற்சிக்கிறார்கள்.
சிபிசிஐடி காவல்துறையினர் ஆதாரம் இல்லாமல் தன்னை விசாரிப்பதால் உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தினாலும் நான் பூத்துணைப்பு வழங்க தயாராக உள்ளேன். நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான கரட்டூர் மணி மூலம் எனக்கு ரூ.2000 கோடி பணம் தருவதாக பேரம் பேசினார்கள். ஆனால் நான் அதற்கு சம்மதிக்கவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டதாக நான் எந்த மருத்துவமனைக்கும் செல்லவில்லை. யாரிடமும் நான் அப்படி தெரிவிக்கவில்லை. என் சகோதரர் கனகராஜ் உயிரிழந்த போது ஆத்தூர் காவல் நிலையத்தில் தன்னை காவல் துறையினர் கட்டாயப்படுத்தி விபத்து என எழுத சொன்னதால் நான் அது போன்று எழுதினேன். என்னைப் பொருத்தவரை ஒரு முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது, அதில் தொடர்புடையவர்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். இதுதான் என் தம்பியின் நோக்கமும் அதுதான், கனகராஜ் உயிரோடு இருந்தபோது, என்னை அம்மாவின் ஆத்மா மன்னிக்காது, நான் தவறு செய்துவிட்டேன் என என்னிடம் கனகராஜ் வருத்தப்பட்டார்.
ஏற்கனவே கொலை, கொள்ளை அரங்கேறிய சம்பவத்தில் எனக்கு சேலம் புறநகர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேற்கு மாவட்டத்தின் அதிமுக செயலாளர் பதவியும், சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் நிற்க வைத்து அதன் பிறகு அமைச்சர் பதவியும் தருவதாக அப்போதே எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கனகராஜிடம் தெரிவித்திருந்தார். மேலும் சம்பவம் நடந்த அன்று 25 கோடி ரூபாய் தருவதாக கனகராஜ் கூறியதாகவும் தெரிவித்தார். கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் இத்தனை நாள் உண்மையை மறைத்ததற்காக தன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால் அதனை ஏற்றுக் கொள்வேன். அதனை சந்திக்க நான் தயார். கனகராஜுக்கு டைரி எழுதும் பழக்கம் எதுவும் இல்லை. அவர் எதையும் எழுதி வைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.