EPS Condemn Jayakumar Arrest : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது .. எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது இடையூறு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல வாக்கு பதிவின்போது ஒருவரை பிடித்து தாக்குதல் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில் ஜெயக்குமாரின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 21, 2022
கழக அமைப்பு செயலாளர் திரு.D.ஜெயக்குமார் அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர், கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எழும்பூர் நீதிபதி முன் ஆஜர்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு:
பதியப்பட்டுள்ள பிரிவுகள் விவரம்: இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 147- கலகத்தில் ஈடுபடுதல்.
148- பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல்.
294(பி)- ஆபாசமாக திட்டுதல்.
153- கலகம் செய்ய தூண்டி விடுதல்.
355- தாக்குதலில் ஈடுபடுதல்.
323- காயம் ஏற்படுத்துதல்.
324- ஆயுதம் அல்லது வேறு வழிகளில் காயம் ஏற்டுத்துதல்.
506(2)- கொலை மிரட்டல்.
மற்றும் பொதுசொத்தை சேதப்படுத்தல் சட்டபிரிவுகளில் 2 பிரிவுகள்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்படும் பரபரப்பு காட்சிகள்...!#JayakumarArrested https://t.co/hPBJ6Tiwq8
— Raja Shanmugasundaram (@SRajaJourno) February 21, 2022
என்ன நடந்தது?
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வந்தது. அப்போது, பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட 49-வது வார்டில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்வதாக தகவல் பரவியது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த வார்டு பகுதிக்கு விரைந்தார். அப்போது, சிலர் அந்த வாக்குச்சாவடியில் இருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, அவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அவரது தலைமையில் சென்ற வழக்கறிஞர் அணியினரும் துரத்திச் சென்றனர். அப்போது, அந்த கும்பலில் ஒரு நபரை மட்டும் அ.தி.மு.க.வினர் பிடித்தனர்.
அந்த நபரை சூழ்ந்த அ.தி.மு.க.வினரில் சிலர் அவரை தாக்கினர். அப்போது, அங்கே இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரை “சட்டையை கழட்டுடா” என்று ஆவேசமாக திட்டினார். சட்டையை கழற்றவைத்து அந்த நபரை ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் இழுத்துச்சென்றனர். பின்னர், அந்த நபரிடம் ஜெயக்குமார் உனக்கு இந்த வார்டில் என்ன சம்பந்தம்? என்று கேட்டார். நரசிங்கன் தெரு 51வது வார்டில் வரும். நீ எதற்கு இங்கே வந்தாய்? என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அந்த நபர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்றும், அவர் கள்ளஓட்டு அளிக்க வந்த நபர் என்றும் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர். அதனை அடுத்து, வாக்கு பதிவின்போது ஒருவரை பிடித்து தாக்குதல் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்