அதிமுக மாஜி அமைச்சர்கள் க்ரிப்டோ கரன்ஸியில் முதலீடா? அடுத்த ஸ்விஸ் வங்கியா க்ரிப்டோ கரன்ஸி!
ஊழல் வழக்குகளில் சிக்கிய அதிமுக அமைச்சர்கள் க்ரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்துள்ளார்களா என்று அடுத்தக்கட்ட விசாரணைக்கு திட்டமிட்டுள்ளது லஞ்ச ஒழிப்புப் போலீஸ்.
ஊழல் வழக்குகளில் சிக்கிய அதிமுக அமைச்சர்கள் க்ரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்துள்ளார்களா என்ற அடுத்தக்கட்ட விசாரணையை திட்டமிட்டுள்ளது லஞ்ச ஒழிப்புப் போலீஸார்.
அண்மையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் என அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் சோதனைக்கு உட்பட்டனர். முதற்கட்டமாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊழல் வழக்குகளில் சிக்கியோரின் அசையும், அசையா சொத்துகளை தாண்டி வெளிநாட்டு முதலீடு, டிஜிட்டல் முதலீடு ஆகியனவற்றையும் கண்காணிக்க லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளதாம்.
அதுவும் குறிப்பாக தற்போது விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ள அமைச்சர்கள் க்ரிப்டோ கரன்ஸிக்களில் முதலீடு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாம். இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி முதலீடுகள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனாலும், கிரிப்டோகரன்ஸி முதலீடுகளுக்கு தடையில்லை. அதனாலேயே பெரும் பணக்காரர்கள் பலரும் இதில் முதலீடு செய்கின்றனர். ஒரு பிட்காயின் விலை தற்போதைய மார்க்கெட்டில் ரூ.50.29 லட்சம் என உள்ளதாம். அதனால், மும்பை, பெங்களூருவில் இருந்து செயல்படும் க்ரிப்டோகரன்ஸி வர்த்தகர்கள் அதிமுக அமைச்சர்கள் சிலருக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டு பணத்தை கிரிப்டோ முதலீடாக செய்து தருவதாகத் தெரிகிறது. இதற்காக முதலீட்டுத் தொகையில் 10% கமிஷனாகவும் பெற்றுக் கொள்கின்றனராம். இவற்றையெல்லாம் பெங்களூருவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி ஒருவர் கூறியுள்ளார்.
சமீப காலங்களில் உலகத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மிகவும் பயன்படுத்தப்படுவது கிரிப்டோகரன்சிதான். பிட்காயின், டாக்காயின் போன்ற பல வகை கிரிப்டோ கரன்சிகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை மத்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனினும் அமெரிக்க, சீனா போன்ற நாடுகளில் கிரிப்டோகரன்சி அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை கிரிப்டோகரன்சிக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. கிரிப்டோகரன்சி பெரும்பாலும் ஹேக்கர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதால் இதனை பயன்படுத்துவது தொடர்பாக இந்திய அரசு இன்னும் பரிசீலிக்கவில்லை. எனினும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை இந்தியாவில் சட்டரீதியில் முறை படுத்தப்படவில்லை. எனவே இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடு மிகவும் குறைந்தே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது அரசியல்வாதிகள் மத்தியில் இது பிரபலமடைந்து வருகிறது. இதற்கு முன்னதாக, அரசியல்வாதிகள் ஸ்விஸ் வங்கிகளில் தங்களின் முதலீட்டை குவிப்பதுண்டு. ஸ்விஸ் நாட்டு வங்கிகளின் சட்டம் முதலீட்டாளர்கள் விவரத்தை எக்காரணம் கொண்டும் கசியவிடாது என்பதால் அங்கு ஏராளமானோர் தாராளமாக பணத்தைக் குவித்து வந்தனர். ஆனால், பனாமா பேப்பர்ஸ் போன்ற சில புலனாய்வு பத்திரிகையாளர்களால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் சுவிஸ் வங்கியில் யார் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்கள் என்பதை புட்டுப்புட்டு வைத்தது. ஆனால் க்ரிப்டோகரன்ஸி முதலீட்டை அப்படியெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. அதனால் தான் இதனை எப்படி லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அணுகுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.