முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது வணிகவரித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.சி.வீரமணி. இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில், இன்று காலை 6.30 மணி முதல் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கே.சி.வீரமணி 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமான அளவில் சொத்து சேர்த்தாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், வேலூர், திருப்பத்தூர், சென்னை, திருவண்ணாமலை, பெங்களூர் ஆகிய பகுதிகளில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
இதில் திருப்பத்தூரில் மட்டும் 15 இடங்களிலும், சென்னையில் 4 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கே.சி. வீரமணியின் உறவினர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜோலார்பேட்டையில் வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் மற்றம் அவரது வீடு ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பத்தூரில் வீரமணிக்கு சொந்தமாக உள்ள நட்சத்திர சொகுசு ஹோட்டலிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிப்காட்டில் பல கோடி மதிப்பிலான நிலத்தை ஆண்டுக்கு ரூபாய் 1 வீதம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை முதலில் தனது மாமனார் பெயரில் பதிவு செய்த கே.சி. வீரமணி, பின்னர் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தபோது கே.சி.வீரமணி, சொத்துக்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்ததாகவும் இவர் மீது புகார் உள்ளது.
2011ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் சொத்து மதிப்பு ரூபாய் 7 கோடி ஆகும். ஆனால், 2021ம் ஆண்டு அதாவது அமைச்சராக பொறுப்பு வகித்த 10 ஆண்டுகளில் கே.சி.வீரமணியின் சொத்து மதிப்பு 90 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு இவர் மீது பதியப்பட்ட சொத்துக்குவிப்பு புகாரின் காரணமாகவே தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.