காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர்: யானையிடம் துர்கா ஸ்டாலின் ஆசிர்வாதம்! நாளை வெள்ளோட்டம்!
Kanchipuram Ekambaranathar Temple: "காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, புதிய தங்கத் தேர் வெள்ளோட்டத் துவக்கம், முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றார்"

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில், காஞ்சிபுரம் மகா பெரியவா மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள தங்க தேரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார். யானையிடம் மனம் உருகி துர்கா ஸ்டாலின் ஆசிர்வாதம் வாங்கினார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் தங்கத்தேர்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்குச் சொந்தமான புதிய தங்கத் தேரின் வெள்ளோட்ட துவக்க விழா காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை மஹா பெரியவர் மணி மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஏகாம்பரநாதர் கோவிலில், வரும் டிசம்பர் 8-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அதற்காகப் பிரத்யேகமாகப் புதிய தங்கத் தேர் உருவாக்கும் பணி நிறைவடைந்தது.
ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளையின் மூலம், மரம் மற்றும் தங்க வேலைப்பாடுகளைச் செய்ய 40-க்கும் மேற்பட்ட சிற்பிகளைக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் தங்கத் தேர் உருவாக்கப்பட்டது. இந்தத் தேர் 23 அடி உயரம், 15 அடி நீளம், 13 அடி அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் 23 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுத் தங்கத் தகடுகள் பொருத்தும் பணி நிறைவுபெற்றது.
துர்கா ஸ்டாலின் பங்கேற்பு
நாளை நடைபெற உள்ள இந்தத் தங்கத் தேரின் வெள்ளோட்டத்தைத் துவக்கி வைப்பதற்காக, இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஓரிக்கை மணி மண்டபத்திற்கு வருகை தந்தார். மணி மண்டபத்திற்கு வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அங்கு வந்திருந்த யானை ஒன்று அவருக்கு ஆசிர்வாதம் அளித்து, மலர் மாலை அணிவித்தது.
இதைத் தொடர்ந்து, மூலவர் மஹா பெரியவரைச் சிறப்பு தரிசனம் செய்த துர்கா ஸ்டாலினுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. பின்னர், வெள்ளோட்டத்திற்காகக் கொண்டு வரப்பட்டிருந்த யானை மற்றும் ஒட்டகங்களை அவர் மலர் தூவி வரவேற்றார். இறுதியாக, ஏகாம்பரநாதர் கோவிலுக்குத் தயாராகியுள்ள இந்தப் புதிய தங்கத் தேருக்குத் தீபாராதனை காண்பித்து, வழிபட்டபின், நாளை நடைபெற உள்ள வெள்ளோட்டத்தை அவர் முறைப்படி துவக்கி வைத்தார்.





















