காரைக்காலில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
காரைக்காலில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு
புதுச்சேரி: காரைக்காலில் ஓர் ஆண்டுக்கு பின் கொரோனா தொற்றுக்கு பெண் பலியாகியுள்ளார். இதையடுத்து பொதுஇடங்களில் முககவசம் கட்டாயம் அணிய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவல் கடந்த ஓர் ஆண்டாக அதிகம் இல்லையென்றாலும், மாவட்ட நலவழித்துறை சார்பில் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சமீப காலமாக ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, அவர்கள் வீட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் யார், யார் என அடையாளம் கண்டு அவர்களுக்கான சிகிச்சையை மாவட்ட நலவழித்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் காரைக்கால் வேட்டைக்காரன் வீதி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அந்த பெண் இன்று பரிதாபமாக இறந்துபோனார். இதனால் காரைக்காலில் மீண்டும் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. இறந்த பெண் வசித்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நலவழித்துறை நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொது இடங்களில், மக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவேண்டும். குறிப்பாக, தியேட்டர், வணிக வளாகங்கள், மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.