Flight Service Cancelled: மிரட்டும் மிக்ஜாம்.. கொட்டும் மழை.. ரத்து செய்யப்பட்ட 20 விமானங்கள்!
Flight Service Cancelled: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு.
6 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைப்பு. புறப்படு விமானங்கள் 10, வருகை விமானங்கள் 10, இதுவரை 20 விமானங்கள் ரத்து. சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் 14, வருகை விமானங்கள் 12, மொத்தம் 26 விமானங்கள் பல மணி நேரம் தாமதம்.
மீனம்பாக்கத்தில் 82 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசி வருவதால் காலை 10 மணி முதல் 2 மணி நேரத்திற்கு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதேநிலை தொடர்ந்தால் விமான சேவை ரத்து செய்யப்படும் நேரம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இன்று சென்னைக்கு அபுதாபி 2 விமானங்கள், துபாய் 2 விமானங்கள் மற்றும் பக்ரைன், மும்பை மொத்தம் 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
அதைப்போல் சென்னையில் இருந்து துபாய், இலங்கை, விஜயவாடா, ராஜமுந்திரி, கோவை, திருச்சி, கொச்சி உள்ளிட்ட 10 புறப்பாடு விமானங்கள், மற்றும் அதே இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும் 10 விமானங்கள், ஆகிய 20 விமானங்கள் இன்று இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தவிர துபாய், லண்டன், சிங்கப்பூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, உட்பட 14 புறப்பாடு விமானங்கள், லண்டன், கோலாலம்பூர், சார்ஜா, துபாய், மும்பை, டெல்லி உள்ளிட்ட 12 வருகை விமானங்கள், மொத்தம் 26 விமானங்கள் இதுவரை பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வரும் விமானங்கள் மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம், அல்லது வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படலாம், இல்லையேல் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படலாம் என்று தெரிய வருகிறது.
இதை அடுத்து விமான பயணிகள் அனைவரும் அந்தந்த விமானம் நிறுவனங்களின், இணையதளங்களில் தொடர்பு கொண்டு விமானங்களின் புறப்பாடு வருகை குறித்து, பயணிகள் தெரிந்து கொண்டு, அதன்பின்பு விமான நிலையத்திற்கு வந்தால் போதும். மேலும் அவசியமான பயணம் என்றால் மட்டும், இன்று விமானப்பயணம் மேற்கொள்ளலாம். இல்லை என்றால், இன்று விமான பயணத்தை பயணிகள் தவிர்ப்பது நல்லது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
விமான நிலையத்தில் வேகமாக காற்று வீசி வருவதாலும் விமான ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாலும் 68 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

