Black Fungus Update : தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான அச்சம் வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கருப்பு பூஞ்சை நோய் குறித்த தேவையற்ற பீதி அனைவரது மத்தியிலும் வந்திருக்கிறது. இதுகுறித்து தேவையற்ற அச்சம் இருக்க வேண்டியதில்லை என்றார். மேலும், கோவிட் தொற்றால் வரக்கூடிய புதிய வைரஸ் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகிறன்றன. பதற்றம் வேண்டாம். இந்த பூஞ்சை தொற்று பல ஆண்டுகளாக இருக்கக்கூடியது என்றும் கோவிட் தொற்றுக்கு முன்பிருந்தே இந்த பூஞ்சை தொற்று உள்ளது என்றும் கூறினார்.
கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு எடுப்பவர்கள், ஐ.சி.யூ.வில். பல நாட்களாக இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். இதுதவிர ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கோவிட் தொற்று உள்ளவர்களில் இதன் தாக்கம் அதிகம் இருப்பதாக செய்திவந்தது. இதனை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் அர்த்தம் இந்த நோய் எங்கேனும் யாருக்காவது வந்தால் பொது சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்பதுதான் என்று கூறினார்.
மேலும், இந்த பாதிப்பு குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட தனிக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் நீரிழிவு நோயாளிகள் 7 பேர் உள்பட 9 நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் நலமுடன் உள்ளதாகவும், சிகிச்சை எடுத்து வருகின்றனர் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் உள்ளன என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கருப்பு பூஞ்சையின் பாதிப்பு மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மியூகோர்மைசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை வைரசின் தாக்கம் ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வைரசை பெருந்தொற்றாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், கருப்பு பூஞ்சை வைரசின் பரவல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், கருப்பு பூஞ்சை ஏற்கனவே உள்ள தொற்றுதான் என்றும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.