(Source: ECI/ABP News/ABP Majha)
திருவண்ணாமலை: காவல் துணை ஆய்வாளரான திருநங்கை - இவர் நம்பிக்கையின் கதை!
திமலை விவசாய குடும்பத்தை சேர்ந்த சிவன்யா என்ற திருநங்கை தமிழகத்தின் 2-வது திருநங்கை காவல்துறை துணை ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
திருவண்ணாமலை மாவட்டம் பாவுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வவேல்(65) இவருடைய மனைவி வளர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக செல்வவேல் இறந்து விட்டார். அவர்களுக்கு 3 பிள்ளைகள். முதலாவதாக பிறந்தவர் ஸ்டாலின். MBA பட்டபடிப்பு படித்துள்ளார். தற்போது அவர் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 2-வதாக பிறந்தவர் சிவன்யா. திருநங்கை. 3-வதாக பிறந்தவர் தமிழ்நிதி, தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.
திருநங்கை சிவன்யா, இளம் வணிகவியல் பட்டதாரியாவார். இவர் பள்ளி படிப்பை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து, முடித்து மேல் படிப்புக்கு திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் இளம் வணிகவியல் படித்து பட்டம் பெற்றுள்ளார். சிவன்யா தொடர்ந்து அரசு நடத்தும் போட்டித் தேர்வுக்கு தயாரானார். அவர் காவல் துறையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து, காவலர் துணை ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்றார்.
அதைத்தொடர்ந்து உடல் தகுதி தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற்று தமிழகத்தின் 2-வது திருநங்கை காவல்துறை துணை ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 26-ம் தேதி சிவன்யா போலீஸ் துணை ஆய்வாளர் பணிக்கான ஆணையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றார்.
இதுகுறித்து சிவன்யாவிடம் ABP NADU குழுமத்தில் இருந்து பேசினோம், ‘’நாங்கள் சாதாரண நடுத்தர விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை மிகுந்த சிரமத்துக்கு இடையே என்னுடைய பெற்றோர் படிக்க வைத்தனர். நான் பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்கு சென்ற போது எனக்குள் பாலின வேறுபாடு ஏற்பட்டது. இது குறித்து என்னுடைய குடும்பத்தினரிடம் கூறினேன் அப்போது என்னுடைய தந்தை உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய் என்றும் இது இயற்கையான மாறுதல் மற்றும் அண்ணாமலையார் உனது ரூபத்தில் நமது வீட்டிற்கு வருகிறார் என்று கூறினார். திருநங்கையாக மாறியதும், என்னை தனிமைப் படுத்தாமல் எனது குடும்பத்தினர் என்னை நன்றாக வளர்ந்தனர்.
"நான் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடங்கும் பொழுது சுபஸ்ரீ என்ற திருநங்கை முதலில் துணை ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். அப்போது அதை கண்ட எனக்கு நாம் எதாவது மக்களுக்கு சேவைகள் செய்ய வேண்டும். என்று லட்சியத்தை எண்ணி கடுமையான முறையில் படித்தேன்.அந்த முயற்சி வீணாகமல் சுபஸ்ரீ போலவே நானும் மக்களுக்கு பணியாற்ற துணை ஆய்வாளராக வந்துள்ளேன்.
அதே போன்று மற்ற பெற்றவர்களுக்கு என்ன கூறுவது என்றால் இயற்கையான முறையில் எங்களுக்கான மாறுபாடு ஏற்படுகிறது, இதனால் மாற்றம் அடையும் திருநங்கைளை அவர்களை விளக்கி வைக்காமல், அவர்களுடைய லட்சியத்தை கேட்டு குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் அவற்றை நிறைவேற்றுங்கள் அப்போது அவர்களும் என்னை போன்று சாதனை புரிவார்கள் என்றும், அனைத்துதிருநங்கைகளுக்கும் அரசு இத்தகைய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால், திருநங்கைகள் பல்வேறு அரசு துறைகளில் சாதித்துக் காட்டுவார்கள்.'' என்றார்.