Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah On DMK: ஊழலை மறைக்க திமுக இந்தி எதிர்ப்பை பயன்படுத்துவதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

Amit shah On DMK: இந்தி திணிப்பு தொடர்பான திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
அமித் ஷா குற்றச்சாட்டு
இந்தி திணிப்பு என்ற "ஆதாரமற்ற" குற்றச்சாட்டை திமுக எழுப்புவதாகவும், தமிழ்நாட்டில் ஆளும் கட்சி தனது ஊழலை மறைப்பதற்காக இந்தி எதிர்ப்பு போராட்டங்களை புகை திரையாகப் பயன்படுத்துவதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்தால் தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளைத் தொடங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மோடி அரசு நடவடிக்கை
குற்றச்சாட்டுகளை மறுத்து பேசிய அமித் ஷா, ”பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதன்முதலில் இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்காக ஒரு பிரிவை அமைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முதலமைச்சர்களுடன் அவர்களின் உள்ளூர் மொழிகளில் தொடர்பு கொள்ள பிரதமரே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது இந்தி திணிப்பு பரப்புரையை பொய்யாக்குகிறது” என்றார்.
”மொழியால் பிரிவினை”
தொடர்ந்து பேசுகையில், “மொழியின் பெயரால் தேசத்தைப் பிரிக்க முயல்பவர்களுக்கு இது ஒரு வலுவான பதில். ஒவ்வொரு இந்திய மொழியும் இந்திய கலாச்சாரத்தின் ரத்தினம் போன்றது என்று நாங்கள் கருதுகிறோம். தெற்கின் எந்த மொழியையும் அல்லது ஒரு மாநிலத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்று அவர்களால் உண்மையில் சொல்ல முடியுமா? நாங்கள் மாநிலங்களிலிருந்தும் வருகிறோம். நான் குஜராத்திலிருந்து வருகிறேன். நிர்மலாஜி தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்" என அமித் ஷா குறிப்பிட்டார்.
திமுக மீது குற்றச்சாட்டு
மேலும் பேசுகையில், “மருத்துவம் மற்றும் பொறியியல் பாடத்திட்டங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதன் மூலம் மொழிகளின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பணியாற்றியுள்ளது. இரண்டு வருடங்களாக, பொறியியல் மற்றும் மருத்துவ பாடத்திட்டங்களை தமிழில் மொழிபெயர்க்குமாறு நாங்கள் தமிழக அரசிடம் கேட்டு வருகிறோம். ஆனால், உங்களுக்கு அந்த தைரியம் இல்லை, ஏனெனில் உங்கள் நிதி நன்மைகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
"மொழியின் பெயரால் விஷம்"
பாஜக அரசு மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததும், இந்தப் பாடத்திட்டங்களை தமிழில் கற்பிக்கும். அவர்கள் மொழியின் பெயரால் விஷத்தைப் பரப்புகிறார்கள். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொழியை (ஆங்கிலம்) நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் இந்திய மொழியை நீங்கள் விரும்பவில்லை. மொழியின் பெயரால் நாட்டைப் பிரிக்க முடியாது. நீங்கள் வளர்ச்சி பற்றிப் பேச வேண்டும். ஆனால், மொழியின் பெயரால் உங்கள் தவறுகளையும், ஊழலையும் மறைக்க முயற்சிக்கிறீர்கள். நாங்கள் உங்களை அம்பலப்படுத்துவோம், உங்கள் தவறுகளை அம்பலப்படுத்த ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்வோம்" என்று அமித் ஷா சூளுரைத்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

