Chengalpattu Vaccine | செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையில் உற்பத்தி தொடங்குமா? - பதிலளித்த எம்.பி., டி.ஆர்.பாலு
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர்களை சந்தித்த பிறகு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கூறினார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் உள்ளதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி நிலையத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய இணை அமைச்சர் மன்சூக் மாண்ட்வியாவை டெல்லியில் இன்று தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இருவரும் இன்று டெல்லியில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, செங்கல்பட்டு தடுப்பூசி நிலையத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி., டி.ஆர்.பாலு, “எச்.எல்.எல். தடுப்பூசி உற்பத்தி மையத்தினை இயக்க தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் வரவேண்டும். இதற்காக தனியாரிடமும் மத்திய அரசு டெண்டர்விட்டது. ஆனால், டெண்டர் எடுக்க பலர் ஆர்வம் தெரிவிக்கவில்லை. அந்த டெண்டர் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. அதனால்தான் தாமதம் ஆகிறது. முதலீடு செய்வதில் பிரச்சினை இருக்கிறது.
மத்திய அரசு இதுதொடர்பாக தனியாரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வர ஒரு வாரம் ஆகலாம். அதன்பின்னர், உற்பத்தி ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்துவதா? அல்லது மத்திய அரசு நடத்துவதா? என்பது தெரியவரும். ஆனால், உற்பத்தி ஆலை இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.
உலக சுகாதார மையத்தின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டதால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை. மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அதிக தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் குறிக்கோள். மத்திய அமைச்சர்களிடம் இந்த சந்திப்பில் நிதியுதவி கேட்கவில்லை. பணம் பிரச்சினை இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை மக்கள்தான் முக்கியம். தடுப்பூசியை விரைவாக கொண்டு வரவேண்டும்" என கூறினார்.
தமிழகத்தில் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு அதிகாரிகள், சுகாதரத்துறை அதிகாரிகள் உள்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும். இதுதொடர்பாக பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளிலும் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது