EXCLUSIVE: "எந்த பதவி கொடுத்தாலும் ஏற்கத்தயார்..! அமைச்சர் ஆவது எப்போது?" ஏபிபி நாடு-க்கு கனிமொழி சிறப்பு பேட்டி..!
Kanimozhi EXCLUSIVE Interview: திமுக எம்.பி. கனிமொழி ஏபிபி நாடுக்கு பிரத்யேகமாக அளித்த நேர்காணலில் கூறியது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
Kanimozhi EXCLUSIVE Interview: திமுக எம்.பி. கனிமொழி ஏபிபி நாடுக்கு பிரத்யேகமாக அளித்த நேர்காணலில் கூறியது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கேள்வி : தூத்துக்குடி நெய்தல் திருவிழாவின் நோக்கம் என்ன?
கனிமொழி : தமிழர்களின் பண்பாடு, கலை, கலாச்சாரம், நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது தான் நெய்தல் திருவிழா. மண்சார்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க ஏதுவாக நெய்தல் திருவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு பெரியதாக பாதிப்பட்டவர்கள் இவர்கள் தான். மேலும், தமிழர்களின் பாரம்பரியம் அனைத்தையும் மீட்டுக் கொண்டு வரும் வகையில் கொண்டாட்டமாக நெய்தல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டால் கட்டாயம் நடத்தப்படும். அதேபோன்று புத்தக திருவிழாவை அனைத்து மாவட்டங்களில் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார்.
கேள்வி : கலைஞர் கருணாநிதியின் அட்வைஸ் என்ன?
பதில்: முதலில் நான் அரசியலுக்கு வருவதை பற்றி சிந்தித்து பார்க்கவில்லை. நான் மிகவும் குழப்பத்தில் இருந்தபோது, அவர் சொன்னது என்னவென்றால் ’உங்களால் நம்பக்கூடிய அனைத்து விஷயங்களை செய்ய முடியும்' என்று கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார். அரசியலுக்கு வருவதற்கு யோசித்தது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்குமா என்று நினைத்தேன்.
அதுமட்டுமின்றி பொதுவாக அரசியலில் ஏற்றம் இறக்கம் இருக்கும். இதனை வைத்து மக்கள் தங்களை என்ன கணிப்பார்கள் என்று நினைத்தேன். வெற்றி, தோல்வியை விட கணிப்பு என்பது மிகவும் முக்கியம் என்று நினைத்து அரசியலில் வருவதற்கு தயக்கம் இருந்தது. அதுமட்டுமின்றி கலைஞரின் கலை வாரிசாக இருக்க நினைத்தேன்.
கேள்வி : திமுகவின் தேசிய அரசியல் முகமாக இருப்பது எப்படி?
பதில்: தி.மு.க.வின் தேசிய அரசியல் முகமாக நான் மட்டுமில்லை பலர் உள்ளனர். என்னை பொறுத்தவரையில், தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகள் எதையும் நான் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் கட்சித் தரப்பில் இருந்து அனைத்தை விஷயங்களையும் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறேன்.
கேள்வி : நாடாளுமன்ற உறுப்பினராக 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ளீர்கள். எப்போது அமைச்சரவையில் பார்ப்பது...?
பதில்: அமைச்சரவையில் ஒரு அங்கமாக வருவது என்பது கட்சி எடுக்கக் கூடிய முடிவு. கட்சியில் எந்த பொறுப்பு கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும், யார் எந்த இடத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை கட்சி தான் முடிவு செய்யும்.
கேள்வி : அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு மார்க் என்ன?
பதில்: ஒருவருடைய பணிக்கு நான் எப்போது மதிப்பெண் அளித்ததில்லை. ஆனால் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைப்படும் அளவுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்” என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
கேள்வி: கலைஞர் பாசமிகு தந்தையா...? கண்டிப்பான ஆசானா...?
பதில்: கட்சி பணிகளை பொறுத்தவரை ஒரு கண்டிப்பான ஆசானாக தான் கருணாநிதி இருந்தார். குறிப்பாக தன்னிடம் ஒரு கட்சி பணியில் கண்டிப்பாக தான் இருப்பார். தவறை சுட்டிக்காட்டி தன்னிடம் எப்போது பேசுவார். இதனால் அவருடன் வேலை பார்ப்பது என்பது கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்று கூறினார்.
கேள்வி : நாடாளுமன்ற ஜனநாயகம் எப்படி?
பதில்: நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது திருப்திகரமானதாக இல்லை. என்னென்றால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பாஜக உள்ளது. எந்த ஒரு தீர்மானத்தையும் விவாதமின்றி பாஜக நிறைவேற்றுகிறது. நாடாளுமன்றத்தில் எந்தவித கருத்துகளுக்கும், விவாதத்துக்கு பாஜக இடம் கொடுப்பதில்லை. மேலும், எதிர்குரல்களுடன் எந்தவித விவாதத்தில் பங்கேற்க பாஜக தயாராக இல்லை" என்று எம்.பி.கனிமொழி கூறினார்.
கேள்வி : எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு எப்படி?
பதில்: முதலில் நான் மற்ற கட்சிகளை பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தங்களுடைய பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு தளத்தில் நின்று ஒருமித்த குரலோடு பயணிக்க வேண்டும் என்பது தான் தற்போது நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன். காங்கிரஸின் தேசிய அரசியலில் எதிர்ப்பு முழுமையானதாக இருக்கிறதா? என்பது வரும் கர்நாடக தேர்தலில் தெரியும்.