DMK deputy mayor allocation: திருப்பூருக்கு கம்யூனிஸ்ட்! கும்பகோணத்துக்கு காங்? துணை மேயர் பதவியை பிரித்து கொடுக்கும் திமுகவின் ப்ளான்!
திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22ஆம் தேதி எண்ணப்பட்டன. அதில் திமுக கூட்டணி அதிகமான இடங்களை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது.
இதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகளில் திமுக 43.59 சதவிகிதம் வாக்குகள் பெற்றது. அதிமுக 24 சதவிகித வாக்குகளை பெற்றது. பாஜக 7.17% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 3.16% சதவிகித வாக்குகளையும் பெற்றது. அதேபோல் நகராட்சி உறுப்பினர் தேர்தலில் திமுக 43.49%, அதிமுக 26.86%, பாஜக 3.31%, காங்கிரஸ் 3.04 % வாக்குகளையும் பெற்றன. பேரூராட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக 41.91%, அதிமுக 25.56%, பாஜக 4.30%, காங்கிரஸ் 3.85 % வாக்குகளையும் பெற்றன.
மேயர்..
இந்நிலையில் மேயர், துணை மேயர் பதவிக்கு நாளை (மார்ச் 4) மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது. மாமன்ற உறுப்பினர்களில் வெற்றி பெற்றவர்களில் ஒருவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் இதற்கான வேட்புமனு இன்று மாலை வரை நடைபெறவுள்ளது. நாளை காலை 9.30க்கு மேயர் தேர்தல் நடைபெறும்.
திமுக..
இந்நிலையில் திமுக கூட்டணிக்கட்சிகளுக்கான ஒதுக்கீட்டை அறிவித்து வருகிறது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. கூத்தாநல்லூர் நகராட்சித் தலைவர் பதவியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பவானி, அதிராம்பட்டினம், புளியங்குடி, போடிநாயக்கனூர் ஆகிய நகராட்சி துணைத் தலைவர் பதவியும், வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, புலியூர், சிவகிரி பேரூராட்சித் தலைவர் பதவியும், கூத்தைப்பார், ஊத்துக்குளி, மேல சொக்கநாதபுரம், கீரமங்கலம், சேத்தூர், ஜம்பை பகுதிகளில் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியும் சிபிஐக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கும்பகோணம் மேயர் காங்கிரசுக்கு செல்லும் எனத் தெரிகிறது. அதேபோல சேலம், காஞ்சிபுரம் துணை மேயர் பதவிகளும் காங்கிரஸ் வசம் செல்லும் எனவும், அதற்கான திட்டத்தில் திமுக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த கூட்டணிக் கட்சிகளுக்கு எங்கெல்லாம் பதவி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று திமுக வெளியிடும் எனத் தெரிகிறது.