Accident : எமன் இப்படியா வருவான் ; திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோகம்... என்ன நடந்தது?
விழுப்புரம்: லாரி மோதியதில் ரெயில்வே கேட் உடைந்து தலையில் தாக்கியதில் தி.மு.க. பிரமுகரின் மகன் பலி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் நேர்ந்த பரிதாபம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே லாரி மோதியதில் ரெயில்வே கேட் உடைந்து தலையில் தாக்கியதில் தி.மு.க. பிரமுகரின் மகன் பலியானார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நேர்ந்துள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
தி.மு.க. பிரமுகரின் மகன்
விழுப்புரம் அருகே உள்ள மழவராயனூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் தவமணி. இவர் தி.மு.க. மாவட்ட விவசாய அணி இணை செயலாளராக உள்ளார். இவருடைய மகன் கலாநிதி (வயது 29). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 16-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக கலாநிதி நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பஸ்சில் புறப்பட்டார். மாலை 4.30 மணியளவில் விழுப்புரம் அருகே கோலியனூருக்கு அவர் வந்திறங்கினார். பின்னர் அவரை உறவினரான குணசேகரன் என்பவர், மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
ரயில்வே கேட்டை கடக்க முயன்றனர்
இந்நிலையில் மாலை 4.45 மணியளவில் கோலியனூர் ரெயில்வே கேட் அருகே அவர்கள் வந்தனர். அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் ரெயிலுக்காக அங்குள்ள ரெயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிரே பண்ருட்டியில் இருந்து சென்னை மார்க்கமாக ஒரு லாரி வந்தது. ரெயில்வே கேட்டை மூடுவதற்குள் கேட்டை கடந்து சென்றுவிடலாம் என எண்ணி லாரியை அதன் டிரைவர் வேகமாக இயக்கினார். இதைப்பார்த்த குணசேகரனும், கலாநிதியும் லாரி செல்லும் அதே சமயத்தில் நாமும் கேட்டை கடந்து சென்றுவிடலாம் என எண்ணி கடக்க முயன்றனர்.
இதையும் படிங்க: North Korea Warns: கடுப்பேத்தாதீங்க.. தப்பா ஒரு குண்டு போட்டாகூட போர் தான்.. வடகொரியா எச்சரிக்கை...
தலையில் தாக்கிய இரும்புக்குழாய்
அப்போது ரெயில்வே கேட் மேலிருந்து பாதி இறங்கிய நிலையில் ரெயில்வே கேட்டின் மீது லாரி மோதியது. இதில் அந்த கேட்டின் இரும்புக்குழாய் இரண்டாக உடைந்து துண்டானதில் அதன் ஒருபகுதி, லாரியின் பக்கவாட்டில் வந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த கலாநிதியின் தலையில் பலமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர், அதே இடத்தில் மயங்கி விழுந்தார். உடனே லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசாரும் மற்றும் விழுப்புரம் ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கலாநிதியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல், அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.
இதை கேள்விப்பட்டதும் கலாநிதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று கலாநிதியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதையும் படிங்க: Kanimozhi MP: நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? – மக்களவையில் சீறிய கனிமொழி - வார்த்தையை திரும்பப் பெற்ற மத்திய அமைச்சர்
லாரி டிரைவருக்கு வலைவீச்சு
மேலும் இச்சம்பவம் குறித்து விழுப்புரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை, விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,





















