(Source: ECI/ABP News/ABP Majha)
Vijayakanth: "விஜயகாந்துக்கு கொரோனா தொற்று” - வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை என தேமுதிக தகவல்
நேற்று முன்தினம் மீண்டும் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் போரூர் அருகே உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதாக கட்சி தலைமை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அவர் ஆண்டுக்கு 2, 3 முறை மட்டும் தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வந்தார்.விஜயகாந்த் உடல்நிலை கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, பொதுமக்களையும் கவலையடைய செய்தது.
விஜயகாந்த் மீண்டும் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இப்படியான நிலையில் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி உடல்நலக்குறைவால் போரூர் அருகே உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல்நலம் பற்றி பல்வேறு வதந்திகள் பரவ தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு அவர் நல்ல நிலையில் இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து விஜயகாந்த் சிகிச்சை பெறும் புகைப்படங்களும் வெளியானது. கிட்டத்தட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி உடல் நலம் பெற்று விஜயகாந்த் வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றிருந்தார். அக்கூட்டத்திற்கு வந்த விஜயகாந்தை நிலையை பார்த்து பலரும் கண் கலங்கினர். இதனிடையே நேற்று முன்தினம் மீண்டும் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் போரூர் அருகே உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
— Vijayakant (@iVijayakant) December 28, 2023
இதனைத் தொடர்ந்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாள் இன்று (டிசம்பர் 28) வீடு திரும்புகிறார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.